யாழ்ப்பாணம்- வேலணை பெரிய குளம்- அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

அருள் மாரி பொழிகின்ற கருணைமிகு தாயே
அரவணைத்து ஆட்கொள்ள வரவேண்டும் அம்மா
ஆறுதலைத் தந்து மனம் அமைதியுறச் செய்வாய்
அருளளிப்பாய் உடனிருப்பாய் பெருங்குளத்து முத்துமாரியம்மா
வேலணையில் கோயில் கொண்டு அருள் பொழியும் தாயே
வேதனைகள் களைந்து எமைக்காக்க வரவேண்டும் அம்மா
ஒழுக்கமிகு சமுதாயம் உருவாகச் செய்வாய்
அருளளிப்பாய் உடனிருப்பாய் பெருங்குளத்து முத்துமாரியம்மா
தீவகத்தில் இருந்து நலம் தரும் தாயே
தீவினைகள் நெருங்காது காக்க வரவேண்டும் அம்மா
தொல்லையின்றி வாழும் வழி செய்வாய்
அருளளிப்பாய் உடனிருப்பாய் பெருங்குளத்து முத்துமாரியம்மா
நோய் நொடிகள் வருத்தாமல் காத்தருளும் தாயே
நொந்து மனம் வாடாமல் காக்க வரவேண்டும் அம்மா
உடல்நோயும், உளநோயும் அகலச் செய்வாய்
அருளளிப்பாய் உடனிருப்பாய் பெருங்குளத்து முத்துமாரியம்மா
மதிநிறைந்த நல்லருளைத் தந்திடும் தாயே
மனத்தினிலே நல்லமைதி தந்திடவே வரவேண்டும் அம்மா
வாழ்வில் என்றும் நிம்மதியை நிலைக்கச் செய்வாய்
அருளளிப்பாய் உடனிருப்பாய் பெருங்குளத்து முத்துமாரியம்மா
அழகுமிகு திருக்கோயில் உள்ளுறையும் தாயே
பகையில்லா, பயமில்லா வாழ்வு தரவர வேண்டும் அம்மா
உள்ளத்தில் உறைந்து என்றும் மனவுறுதி நிலைக்கச் செய்வாய்
அருளளிப்பாய் உடனிருப்பாய் பெருங்குளத்து முத்துமாரியம்மா.