ஆன்மீகம்

யாழ். அளவெட்டி அருள்மிகு நாகவரத நாராயணர் திருக்கோயில்

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – அளவெட்டி அருள்மிகு நாகவரத நாராயணர் திருக்கோயில்

நலமுடன் வாழ நல்லருள் புரியும் ஐயா நாராயணரே
வளமுடன் வாழ நல்லருள் புரிந்து எமக்கு அருளிடைய்யா
நிம்மதி நிலைத்து நாம் மகிழ்வுறவே கருணையைச் செய்திடைய்யா
அளவெட்டியில் கோயில் கொண்டுறையும் ஐயா நாராயணரே

காத்து அருளும் கடமைகொண்ட ஐயா நாராயணரே
கவலைகள் அண்டா நல்வாழ்வை என்றும் எமக்கு அருளிடைய்யா
நேர்மை நிறைந்த நல்வாழ்வு நிலைக்க கருணையைச் செய்திடைய்யா
அளவெட்டியில் கோயில் கொண்டுறையும் ஐயா நாராயணரே

பாம்பணையில் பள்ளி கொண்டு பாராளும் ஐயா நாராயணரே
பாரினிலே பெருமையுடன் நாம்வாழ எமக்கு அருளிடைய்யா
சஞ்சலமில்லா மனம் பெறவே கருணையைச் செய்திடைய்யா
அளவெட்டியில் கோயில் கொண்டுறையும் ஐயா நாராயணரே

அன்னை மகாலட்சுமியை அருகு கொண்டுறையும் ஐயா நாராயணரே
அனைத்து நலன்களும் நாம் பெற்றிடவே எமக்கு அருளிடைய்யா
தைரியம் கொண்ட மனத்தினைப் பெறவே கருணையைச் செய்திடைய்யா
அளவெட்டியில் கோயில் கொண்டுறையும் ஐயா நாராயணரே

வளங் கொண்ட தமிழ் மண்ணில் நின்றருளும் ஐயா நாராயணரே
ஆறுதலை, நிம்மதியைப் பெற்றிடவே எமக்கு அருளிடைய்யா
அச்சம், பகை, கொடுமை அண்டாது கருணையைச் செய்திடைய்யா
அளவெட்டியில் கோயில் கொண்டுறையும் ஐயா நாராயணரே

நம்பித் தொழும் அடியார் நலன் காக்கும் ஐயா நாராயணரே
நம்பிக்கை கொண்டு எழுச்சியை பெற்றிடவே எமக்கு அருளிடைய்யா
நோய் நொடிகள் நெருங்கா நிலை தந்து கருணையைச் செய்திடைய்யா
அளவெட்டியில் கோயில் கொண்டுறையும் ஐயா நாராயணரே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button