செய்திகள்

ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம்.

சுப்பர் ஸ்டார் , நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலையில் முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளதாக அப்பலோ மருத்துவமனை அறிவித்துள்ளது.

ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்பில் வைத்தியசாலையினால் இன்று காலை
வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் எதுவும் அபாயகரமான முடிவுகளை
வழங்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு மேலும் சில உடல்நிலை தொடர்பான பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும்
அவற்றின் முடிவுகள் இன்று மாலை வெளியாகுமெனவும் வைத்தியசாலை நிர்வாகம்
தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதால், அவரைப்
பார்க்க எவருக்கும் அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பில் நடிகர்
ரஜினிகாந்தும் கலந்துகொண்டிருந்தார்.

படப்பிடிப்பில் இருந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில்,
படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை மேற்கோண்டதாகவும் அதில்
அவருக்கு கொரோனா தொற்றில்லை என உறுதி செய்யப்பட்டதாகவும் படக்குழுவினால் தகவல்
வழங்கப்பட்டது.

இந்நிலையில், குருதி அழுத்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நடிகர்
ரஜினிகாந்த் ஹைதராபாத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் நேற்று
அனுமதிக்கப்பட்டார்.

70 வயதான ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை
செய்துகொண்டிருந்தார்.

அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு
சிங்கப்பூரில் சிகிச்சைகளை பெற்று வந்தார்.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள
ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில்
எதிர்வரும் 31 ஆம் திகதியன்று அறிவிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button