உலகம்

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கு திகதி இன்றி ஒத்திவைப்பு ..

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்காதுள்ள ஆளுநரை பதவிநீ்க்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, உயர்நீதிமன்றம் திகதி குறிப்பிடாது ஒத்திவைத்துள்ளது.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த, தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய கடந்த ஆண்டு தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கடந்த 15 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காது, அரசியல் சாசன விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளதால், அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறித்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை பதவி நீக்கம் செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எவ்வாறு உத்தரவிட முடியும் என நீதிபதிகள் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தததாக த ஹிந்து இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

Related Articles

Back to top button