செய்திகள்மலையகம்

ரிஷாட்டின் வீட்டில் எரியுண்ட டயகமவைச் சேர்ந்த சிறுமி சிகிச்சை பலனின்றி மரணம்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு – பொரளை, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள வீட்டில் வீட்டு வேலைகளை செய்து வந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

16 வயதும் 8 மாதங்களுமான குறித்த சிறுமி, கடந்த ஜூலை 03ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் (15) மரணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டு நீதவான் மரண பரிசோதனையைத் தொடர்ந்து, சடலத்தின் பிரேதப் பரிசோதனை இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் பொரளை பொலிஸாரினால் 10 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த அறிக்கைகள் மற்றும் ஏனைய சாட்சியங்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்த பின்னர் சம்பவம் தொடர்பான முடிவை நீதிமன்றம் அறிவிக்கவுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

அக்கரபத்தனை டயகம 03ஆம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி; வறுமை காரணமாக 7 ஆம் தரத்துடன் பாடசாலை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆறு உடன்பிறப்புகள் கொண்ட அச்சிறுமியின் குடும்பத்தில் மூன்றாவது பெண்பிள்ளை ஆவார். ஒரு மூத்த சகோதரர் மற்றும் நான்கு சகோதரிகள் உள்ளனர்.

சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு ஒரு தொழில் வழங்குனர் மூலம் பணிப்பெண்ணாக எம்.பி. வீட்டிற்கு சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அவர் வேலைக்குச் சென்ற பிறகும் ஒரு முறை கூட அவளைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், சிறுமி ஒவ்வொரு மாதமும் வீட்டிற்கு பணம் அனுப்பியுள்ளார் அத்துடன் அவ்வப்போது தனது குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அண்மையில் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியபோது வீட்டில் பணிபுரியும் வாகன ஓட்டுநரால் தாக்கப்பட்டதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

சிறுமியின் உறவினர்களின் கூற்றுப்படி, அவர் ஒரு நுளம்புத்திரியை கொண்டு சென்றபோது தீப்பிடித்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும், சிறுமி தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றபோது, ​​தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தை அவர்கள் காணவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சிறுமியின் மூத்த சகோதரர், வீட்டிற்குச் சென்று சோதனை செய்த பின்னர், சந்தேகத்தைப் பற்றி பொலிசாருக்குத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறுமிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், தீ காரணமாக சிறுமியின் உடலில் 70% க்கும் அதிகமான பகுதி எரிந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button