உலகம்

ரொபர்ட் முகாபே எனும் அரசியல் ஆளுமை ..

சுதந்திரத்திற்கு பின்னர் சிம்பாப்வேயின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரொபர்ட் முகாபே தனது 95 வயதில் இன்று சிங்கப்பூரில் காலமானார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முகாபே இன்று உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்று தசாப்த காலமாக சிம்பாப்வேயை ஆட்சி செய்த அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற இராணுவ சதித்திட்டத்தினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சிம்பாப்வேயின் மூன்றாவது மற்றும் தற்போதைய ஜனாதிபதியாக எம்மெர்சோன் டாம்பூட்ஸ்வ் மனங்ககவா பொறுப்பேற்றார்.

சிம்பாப்வேயின் ஸ்தாபக தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான ரொபர்ட் முகாபே காலமானதை நான் அறிவிப்பது மிகுந்த வருத்தத்தோடு தான் என்று எம்மெர்சோன் டாம்பூட்ஸ்வ் மனங்ககவா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

எங்கள் தேசம் மற்றும் கண்டத்தின் வரலாற்றில் அவர் செய்த பங்களிப்பு ஒருபோதும் மறக்கப்படாது. அவருடைய ஆன்மா அமைதியுடன் ஓய்வெடுக்கட்டும் என்றும் தனது இரங்கல் செய்தியில் மனங்க்கவா கூறியுள்ளார்.

ரொபர்ட் கேப்ரியல் முகாபே 1924 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி ஹராரேவின் வடமேற்கில் உள்ள குட்டாமா மிஷனில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.

1980 ஆம் ஆண்டு முதல் 1987 வரை பிரதமராக பதவி வகித்த முகாபே , 1960 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஆப்பிரிக்காவில் விடுதலைப் போராட்ட வீரராக திகழ்ந்தார்.

சிம்பாப்வே விடுதலை பெற்றதையடுத்து ஆப்பிரிக்க மக்கள் முகாபேவை கதாநாயகராகப் போற்றினர். அதேநேரம் ஒரு புத்திசாலித்தனமான குழந்தை எனவும் முகாபே வர்ணிக்கப்பட்டார்.

1998 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகள் இவரைக் குற்றம் சாட்டஇ வந்தன.

எவ்வாறாயினும் முகாபேயின் பொருளாதாரக் கொள்கைகளும், இரண்டாம் கொங்கோ போரில் செலவான குறுக்கிடலும் சிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாயின.

2008 ஆம் ஆண்டில் முகாபேயின் அரசியல் கட்சி, சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம், முதல் தடவையாக தேர்தலில் மக்களாட்சி மாற்றல் இயக்கம் என்ற எதிர்க் கட்சியிடம் தோல்வியடைந்தது .

கடந்த 2015 ஆம் ஆண்டு எத்தியோப்பியா தலைநகர் ஆடிஸ் ஆபபாவில் நடைபெற்ற ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில், ஆப்பிரிக்க யூனியனின் தலைவராக முகாபே பொறுப்பேற்றுக் கொண்டார்.

ரொபர்ட் முகாபே கடந்த 2017 ஆம் ஆண்டு இராணுவ சதித்திட்டத்தினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன்பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், எம்மெர்சோன் மனங்ககவாவை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் சாமிசா போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் சுமார் 50 சதவீதம் வாக்குகளை பெற்ற எம்மெர்சோன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர், கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இந்த தேர்தல் முடிவை எதிர்த்து நெல்சன் சாமிசாவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

வன்முறையாக மாறிய இந்த போராட்டத்தை ஜனாதிபதி எம்மெர்சோன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார்.

பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வெடித்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ரொபர்ட் முகாபே சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

நவம்பர் 2017 இல் முகாபே பதவியில் இருந்து விலகிய பின்னர், அவரது புகழ்பெற்ற உடல் சகிப்புத்தன்மை நீங்கியது போல் தோன்றியமை குறிப்பிடத்தக்கது.

பல குற்றச்சாட்டுக்கள் , பல எதிர்ப்புகள் , பல தடவைகள் சிறை தண்டனை என அரசியலுக்காக போராடிய முகாபே இறந்தாலும் சிம்பாப்பே மக்களின் ஆதர்ஷ நாயகனாக போற்றப்படுகிறார்.

Related Articles

Back to top button
image download