லண்டன் சுரங்க ரெயிலில் மீண்டும் வெடிச் சத்தம்: பயணிகள் அலறல்
லண்டன் பெருநகர சுரங்க ரெயிலில் இன்று மீண்டும் புகையுடன் கூடிய பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் பீதியடைந்த பயணிகள் அலறியபடி இறங்க முயன்றதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
பிரிட்டன் நாட்டு உள்ளூர் நேரப்படி இன்றுகாலை லண்டன் பெருநகர மாவட்ட சுரங்க ரெயில் டவர் ஹில் நிலையத்தை நெருங்கியபோது ஒரு பெட்டின் உள்ளே ஆசிட் வாசனையுடன், பெரும் புகை மண்டலத்தை ஏற்படுத்திய ஒரு மர்மப் பொருள் வெடித்துச் சிதறியது.
சுரங்க ரெயில் பெட்டிக்குள் இன்று மீண்டும் குண்டு வெடித்ததாக சமூக வலைத்தளங்களின் மூலம் வெளியான தகவலால் டவர் ஹில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ரெயில் நிலையத்தின் நாற்புற வாயில்களும் அடைக்கப்பட்டு, அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
லண்டன் டியூப் ரெயிலில் சமீபத்தில் இதேபோல் ஒரு வெடிகுண்டு சம்பவத்தை நினைவுகூர்ந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறியடித்தபடி, ரெயிலில் இருந்து கீழே இறங்குவதற்காக கதவுப் பக்கம் கும்பலாக ஓடிவந்தனர். இந்த தள்ளுமுள்ளில் சிக்கி 5 பேர் காயம் அடைந்த நிலையில் வெடித்த மர்மப்பொருள் மொபைல் போன் பேட்டரி சார்ஜர் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.