லெட்சுமி தோட்ட மேடை இடிந்து வீழ்ந்தமைக்கு யார் காரணம் ?

கடந்த இரண்டு மாதங்களாக பொகவந்தலாவ லெட்சுமி தோட்ட மைதான மேடை தொடர்பான வெளிவரும் செய்திகள் அடிப்படை ஆதரமற்றது என லெட்சுமி தோட்ட பொதுமக்களும், இளைஞர்களும் தெரிவிக்கின்றனர்.மேலும் மேடை தொடர்பான வதந்திகளை செய்திகளாக்க வேண்டாம் எனவும் ஊடகங்களிடம் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் மைதானமானது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் புனரமைக்கப்படவில்லை எனவும், மைதானம், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலேயே புனரமைக்கப்பட்டதாகவும் குறித்த தோட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சொந்த ஊரில் உள்ள மைதானத்தை யார் புனரமைப்பு செய்தார்கள் என்று தெரியாத, சொந்த ஊரின் பெயரையே பிழையாக எழுதும் பிராந்திய செய்தியாளரின் செய்திகளின் உண்மை தன்மைகளை ஊடக நிறுவனங்கள் ஆராய வேண்டும் எனவும் அந்த ஊர் இளைஞர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
புனரமைப்புக்கும் புதிதாக நிர்மானிப்பதற்குமான வித்தியாசங்களை பிராந்திய செய்தியாளர் தெரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரியவில்லை என்றால், தங்களது இளைஞர் கழகத்திலிருக்கும் இளைஞர்களிடம் தமிழ் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட “ஊருக்கு ஒரு கோடி ரூபாய்” வேலைத்திட்டத்தின்படி லெட்சுமி தோட்ட மத்தியப் பிரிவுக்கும் 75 ஆயிரம் ரூபாய், முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாவும், பின்னர் 24 ஆயிரம் ரூபாவும், கிடைக்கப்பெற்றது. கொடி தினத்திற்காக 1000 ரூபாய் வழங்கப்பட்டது.
74 ஆயிரம் ரூபாவைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மைதான மேடைக்கான பணிகள் ஆரம்பித்தில் மேசன்(பாஸ்) ஒருவர் கிடைக்காததால் ஓரிரு மாதங்கள் பெரும் இழுத்தடிப்புக்கு மத்தியில் குறித்த மேடை தொடர்பில் தொடர் செய்திகளை வெளியிட்டு வரும் நபரே, மேடைக்கான மேசனை(பாஸ்) பொகவந்தலாவ பிரதேசம் ஒன்றிலிருந்து அழைத்து வந்திருந்தார்.
குறித்த மேடை இடிந்துவிட்டதாகவும் இடித்துவிட்டதாகவும் நீழிக்கண்ணீர் வடிக்கும் குறித்த பிராந்திய செய்தியாளர் திறமையற்ற மேசன் ஒருவரை அழைத்துவந்திருந்தார் என்பதை மறந்துவிட்டார் போல.
மைதான மேடை இடிந்து வீழ்ந்தமைக்கு மேற்படி பிராந்திய செய்தியாளர் பொறுப்புக் கூற வேண்டிய நிலையில், ஊடக பலத்தினைக் கொண்டு செய்திகளை திரிபுபடுத்தி ஊடக தர்மத்தையும், தமிழையும் படுகொலை செய்துவருகிறார்.
குறித்த ஊடகவியலாளர் தேடிப்பிடித்த தரமற்ற மேசனால் கட்டப்பட்ட மைதான மேடையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து, அதனால் குறித்த மைதானத்தில் விளையாடும் சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், பொதுமக்களின் சம்மதத்துடனேயே குறித்த மைதானத்தை பொதுமக்களும் இளைஞர்களும் இடித்தனர். இது தொடர்பான முழுமையான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் இளங்கதீர் இளைஞர் கழகம் தெரிவித்துள்ளது.
ஆகவே அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் செய்தியாளர், தமிழையும், எப்படி செய்தி ஒன்றை உருவாக்குவது என்பதையும், அதனை எவ்வாறு அறிக்கைப்படுத்துவது என்பதையும், அதே ஊரில் வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர்களிடம் கேட்டுப் படித்துக்கொள்ள வேண்டும் எனவும் இளங்கதீர் இளைஞர் கழகம் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
தற்போது மேடை அமைப்பதற்கான பணிகள் ஊர் மக்களின் பெரும் ஆதரவுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், துரதிஸ்டவசமாக எங்களது மேடை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மேசன் விபத்துக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வருவதாலேயே பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் இளங்கதீர் இளைஞர் கழகத்தினர் விளக்கமளித்துள்ளனர்.