ஆன்மீகம்

வடமேல் மாகாணம்- புத்தளம் நகர்- அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

 

புத்தளம் நகரின் எல்லை பூமியைத் தாங்கும் அன்னை
சித்திகள் வழங்கவென்று சீர்மையாய்க் கோயில் கொண்டாய்
எத்திக்கும் உந்தன் அன்பு ஏற்றிடும் தெய்வஜோதி
சத்தியம் அதுவேயுண்மை தாயே முத்துமாரியம்மா

வெற்றிகள் வந்து சேர வேதனை அகன்று ஓட
நற்றுணையாவாய் அம்மா நாடியே இறைஞ்சுகின்றோம்
ஆற்றலைத் தந்தெமக்கு ஆறுதல் தருவாய் தேவி
போற்றியே அடிபணிந்தோம் தாயே முத்துமாரியம்மா

முன்புறம் திருக்குளமும் பின்புறம் உப்பளமும்
அன்புரு கொண்ட உந்தன் ஆலய எல்லைகளே
இன்புற இனியவழி ஈந்திட வருவாயம்மா
உன்னடி சரணடைந்தோம் தாயே முத்துமாரியம்மா

நவராத்திரி நாட்களிலே நல்லருள் பரப்பிநின்று
நகர்வலம் வந்தெமது நன்மைகள் காப்பவளே
நலமே எமக்கருளும் உனைநாடியே நிற்கும் எங்கள்
நாடியின் உயிர்த்துடிப்பே தாயே முத்துமாரியம்மா

பெருமைகள் கொண்ட அம்மா பேதமை போக்கிடுவாய்
அருள் வெள்ளம் பெருக்கியெம்மை ஆள நீ கருணை கொள்வாய்
இருள் தரும் துன்பநிலை இல்லா தொழித்திடுவாய்
ஊரெங்கும் உந்தன் மாட்சி ஒளிரட்டும் தாயே முத்துமாரியம்மா

சத்தியம் நிலைத்து நிற்க சாதனைகள் மேலோங்கிவெல்ல
இத்தலம் கோயில் கொண்ட இணையில்லாப் பேரருளே
நித்திய சீர்மை வாழ்வு நிம்மதியோடெமக்கருளும்
புத்தளம் அமர்ந்த ஜோதி தாயே முத்துமாரியம்மா.

 

Related Articles

Back to top button