ஆன்மீகம்

வட மாகாணம்- யாழ்ப்பாணம்- காரைநகர்- அருள்மிகு மணற்காடு- முத்துமாரி அம்மன் திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

 

மாசற்ற அன்பு நிறை திருமகளாம் முத்துமாரி அம்மன்
மாநிலத்தோர் நலமடைய வழிதரவே வந்தாள்
அருள் புரியும் அவள் பாதம் பற்றிடுவோம் நாங்கள்
எமது நலன் பேணிக் காத்திடுவாள் மணற்காட்டு அம்மன்

காரைநகர் தமிழ் மண்ணில் கோயில் கொண்ட முத்துமாரி அம்மன்
காலமெல்லாம் உடனிருந்து ஆதரிக்க வந்தாள்
கவலைகளைத் துடைத்தெறிய அவள் பாதம் பற்றிடுவோம் நாங்கள்
எமது நலன் பேணிக் காத்திடுவாள் மணற்காட்டு அம்மன்

கடல் சூழ்ந்த பெருந்தீவில் வீற்றிருக்கும் முத்துமாரி அம்மன்
கருணை தந்து துணையிருக்க வந்தாள்
நம்பிக்கை கொண்டு அவள் பாதம் பற்றிடுவோம் நாங்கள்
எமது நலன் பேணிக் காத்திடுவாள் மணற்காட்டு அம்மன்

பங்குனியில் வீதியுலா வந்தருளும் முத்துமாரி அம்மன்
பக்தியுடன் தொழுவோர்க்கு அருள் பொழிய வந்தாள்
புவனத்தை ஆளுகின்ற அவள் பாதம் பற்றிடுவோம் நாங்கள்
எமது நலன் பேணிக் காத்திடுவாள் மணற்காட்டு அம்மன்

திருவருளைத் தந்தெம்மை ஆளுகின்ற முத்துமாரி அம்மன்
திக்கெட்டும் நம்பெருமை சாற்றிடவே வந்தாள்
மேதினியில் மேன்மையுற அவள் பாதம் பற்றிடுவோம் நாங்கள்
எமது நலன் பேணிக் காத்திடுவாள் மணற்காட்டு அம்மன்

எழுச்சி தந்து நிம்மதியாய் வாழ வைக்கும் முத்துமாரி அம்மன்
உடனிருந்து நம்வாழ்வை உயர்த்திடவே வந்தாள்
பக்தியுடன் அவள் பாதம் பற்றிடுவோம் நாங்கள்
எமது நலன் பேணிக் காத்திடுவாள் மணற்காட்டு அம்மன்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button