உலகம்செய்திகள்

வரலாறு காணாத கடும் வெப்ப அலையால் மக்களுக்கு எச்சரிக்கை.!

பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் பல நாடுகளுக்கு ஜூன், ஜூலை ஒரு விதிவிலக்கான சூடான மாதங்களாக மாறியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் நெவாடா மாநிலங்களில் முன்னொருபோதும் இல்லாத வகையில் கடும் வெப்ப அலை பதிவாகி வருகின்றது. அதேபோன்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கடும் வெப்பம் நிலவுவதாக அறிவிக்கப்படுகின்றது.

தற்போது அமெரிக்காவில் பதிவாகும் வெப்பநிலை முன்னைய பல சாதனைகளை முறியடித்து அதிகரித்துள்ளது. வட அமெரிக்காவை அண்டிய பல பகுதிகளில் கடும் வெப்பமான சூழல் நிலவுவதை தொடர்ந்து கலிபோர்னியா மற்றும் நெவாடா மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் சில இடங்களில் வெப்பநிலை 54.4 சென்றி கிரேட்டாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மக்களுக்கு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்கவும், குளிர்சாதன அறைகளில் இருக்கவும், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீரற்றகாலநிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் அயலவர்கள் மற்றும் முதியவர்கள் குறித்து கூடிய அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் பொதுமக்களை கேட்டுள்ளனர்.

இதனிடையே ஸ்பெயினின் தலைநகர் மெட்ரிடின் வெப்பநிலை 43 பாகை செல்சியஸாக உயர்ந்துள்ளது. தற்போதைய வெப்பதுடனான காலநிலை தொடர்ந்தால், 50 பாகை செலிசியஸ் வரை அது உயரலாம் என அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேபோன்று ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலும் வழமையான வெப்பநிலையை விட 10 பாகை செல்சியஸ் அதிகரித்த வெப்பநிலை நிலவுகிறது. தற்போது மொஸ்கோ நகரின் வெப்பநிலை 33 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சர்வதேச வானிலை அமைப்பை சேர்ந்த பேச்சாளரான கிளார் இதுகுறித்து கூறுகையில், “தற்போதைய அதிகபட்ச வெப்பநிலைக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் நேரடி தொடர்பில்லாமல் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். கடந்த காலத்தை நோக்கும்போது, வெப்ப அலைகளின் தாக்கம் இயற்கையாக ஏற்படும் ஒன்றாக இருந்தாலும், பருவநிலை மாற்றத்தின் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

Related Articles

Back to top button