செய்திகள்

வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது

வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது. மலையகம் வரலாற்றை மறந்துகொண்டு வருகிறது. தற்போதைய மலையக சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கு வரலாறு தெரியாது. கீழ்வரும் பதிவினை ஒப்பிட்டு நோக்கியதில்….

“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது” மால்கம் எக்ஸ் பிறந்தநாள் பகிர்வு!
1925… அமெரிக்காவில் இன்று இருப்பதைவிட வெள்ளையின வெறி மிகக் கோரமாகத் தாண்டவமாடிய காலம் அது. நிறவெறிக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்காகவும் கறுப்பின மக்கள் அரசியல்மயப்படுவதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். அந்த ஆண்டு மே மாதம் 19-ம் தேதி, ஏர்ல் லிட்டில் – ஹெலென் லிட்டில் தம்பதிகளுக்கு நான்காவது குழந்தையாக பிறந்தான் மால்கம் லிட்டில்.

ஏர்ல் லிட்டில் தாம் வாழ்ந்த பகுதியில் கறுப்பின மக்களுக்கான செயற்பாட்டாளராக இருந்து வந்தார். அவர் மனைவி ஹெலென் லிட்டில் அதே பகுதியில் கறுப்பின மக்களுக்கான ‘நீக்ரோ வேர்ல்ட்’ என்ற தினசரியில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். தாய் தந்தை இருவரும் தங்களுக்கான அரசியலை தங்கள் ஏழு குழந்தைகளுக்கும் கற்பித்து, வளர்த்தனர். மால்கம் லிட்டில் அவற்றை நன்கு கற்றுக்கொண்டான்.

மால்கம் லிட்டிலுக்கு ஆறு வயதாக இருந்தபோது, அவனது தந்தை ஏர்ல் லிட்டில் ‘பிளாக் லிஜியன்’ என்ற வெள்ளையின வெறியர் குழுவால் கொல்லப்பட்டார். அவரது மரணம் தற்கொலை என வழக்கு பதிவு செய்யப்பட்டது. சில நாள்களில், அவனது தாய் ஹெலென் லிட்டில் மனநலம் பாதிக்கப்பட்டு, காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். ஏழு குழந்தைகளும் அரசு விடுதியில் அனுமதிக்கப்பட்டனர்.

மிகத் திறமையான மாணவனாக இருந்த மால்கம் லிட்டில் சட்டம் படிக்க விரும்பினான். அதையறிந்த அவனது ஆசிரியர், “கறுப்பர்களால் சாதிக்க முடியாத இலக்கினை அடைய முயன்று கொண்டிருக்கிறாய்” எனக் கூறி பாகுபாடு காட்ட, மால்கம் லிட்டிலின் பள்ளிப்படிப்பு பாதியில் கைவிடப்பட்டது.

அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் பெரும்பாலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடத் தள்ளப்படுவர். மால்கம் லிட்டிலின் பதின்பருவம் அத்தகைய சட்டவிரோத செயல்களில் கழிந்தது. அதனால் மால்கம் லிட்டில் சிறையில் அடைக்கப்பட்டான். 1946 முதல் 1952 வரையிலான சிறை வாழ்க்கை மால்கம் லிட்டிலின் வாழ்வின் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தது. கறுப்பின மக்களின் அரசியலையும், இஸ்லாம் மதத்தையும் முன்வைத்து உருவாக்கப்பட்ட ‘நேஷன் ஆப் இஸ்லாம்’ என்ற அமைப்பில் இணைந்து, இஸ்லாம் மதத்துக்கு மாறினான் மால்கம் லிட்டில்.

அந்த காலகட்டத்தில் மால்கம் லிட்டில், ‘மால்கம் எக்ஸ்’ ஆக மாறுகிறார். தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கிய மால்கம் எக்ஸ், “பல தலைமுறைகளுக்கு முன், வெள்ளை ஆதிக்கத்தை நிறுவ என் முப்பாட்டனுக்கு சூட்டப்பட்ட ‘லிட்டில்’ என்ற பெயரைத் துறந்து, பெயர் தெரியாத என் ஆப்ரிக்க குடும்பத்தைக் குறிக்க ‘எக்ஸ்’ என்ற பெயரை என்னுடன் சேர்த்துக்கொள்கிறேன்’ என்றார்.

’நேஷன் ஆப் இஸ்லாம்’ அமைப்பின் சிறப்பு பேச்சாளராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்தார் மால்கம் எக்ஸ். ’அவர் கண் அசைத்தால் கலவரம் செய்யவும், கலவரங்களை நிறுத்தவும் முடியும்’ என அந்த கால கட்டத்தின் பத்திரிகைகள் அவரைப் பற்றி எழுதின. அன்றைய கால சிவில் உரிமை அமைப்புகளைப் போல அமைதியின் வழியில் போராடி, கறுப்பினத்தவருக்கான உரிமைகளைப் பெறுவதை ’நேஷன் ஆப் இஸ்லாம்’ அமைப்பு எதிர்த்தது. வன்முறைக்குப் பதில் என்பது திருப்பி அடித்தல் மட்டுமே என்ற கருத்தின் கீழ் இயங்கினார் மால்கம் எக்ஸ்.

சிவில் உரிமைகளுக்காக போராடிய மார்டின் லூதர் கிங் மீது மிகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார் மால்கம் எக்ஸ். “நான் ஒரு அமெரிக்கன். எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்று மார்டின் லூதர் கிங் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக அமைதி வழியில் பேசிய போது, மால்கம் எக்ஸ் அதை விமர்சித்து, “நான் அமெரிக்கன் அல்ல; அமெரிக்க தேசியத்தால் பாதிக்கப்பட்ட 22 மில்லியன் கறுப்பின மக்களுள் ஒருவன் நான். எனக்கு இருக்கும் அமெரிக்க கனவு என்பது கொடுங்கனவு மட்டுமே” என்றார்.

மால்கம் எக்ஸின் பேச்சுகள் கறுப்பின மக்களின் கல்வி, பொருளாதாரம், சமூகம், வாழ்வியல், வரலாறு முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. மால்கம் எக்ஸ் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் போராளியாக அடையாளப்படுத்தப்பட்டார்.

“சுதந்திரம், சமத்துவம், நீதி முதலானவற்றை யாரும் உங்களுக்கு கொடுக்க முடியாது. உண்மையில் அது உங்களுக்கு வேண்டுமென்றால், நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். ” என்றார் மால்கம் எக்ஸ். ’நேஷன் ஆப் இஸ்லாம்’ அமைப்பில் அவருக்கு பெருகிய செல்வாக்கு, அதன் தலைமையை அவர் மீது பொறாமை கொள்ள வைத்தது. மால்கம் எக்ஸுக்கும் அமைப்பின் தலைவர் எலியா முஹம்மதுவுக்கும் இடையில் முரண்பாடுகள் முளைக்கத் தொடங்கின.

’நேஷன் ஆப் இஸ்லாம்’ தலைவர் எலியா முஹம்மத் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழ, அதைக் கண்டித்து அமைப்பில் இருந்து வெளியேறினார் மால்கம் எக்ஸ். அமைப்பில் இருந்து வெளியேறிய சில மாதங்களில், மால்கம் எக்ஸ் தன்னுடைய கடினமான போக்கில் இருந்து வெளிவர முயல்வதாகவும், சிவில் உரிமை போராளிகளுடன் இணைந்து போராடத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

1964-ம் ஆண்டு ஹஜ் யாத்திரை சென்று வந்த மால்கம் எக்ஸ், அதன் பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பலர் அவருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். நைஜீரியப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய மால்கம் எக்ஸுக்கு, பல்கலைக்கழக மாணவர்கள் “வீடு திரும்பிய மகன்” என்ற கெளரவப் பட்டத்தை அளித்தனர். தனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை அது என நெகிழ்ந்து போனார் மால்கம் எக்ஸ்.

‘நேஷன் ஆப் இஸ்லாம்’ அமைப்பில் இருந்து வெளியேறினாலும், மால்கம் எக்ஸ் மீதான கோபம் அந்த அமைப்பினருக்கு குறையாமல் இருந்தது. பல மேடைகளில் அவை கொலை மிரட்டல்களாக வெளிப்பட்டன. பிப்ரவரி 21, 1965 அன்று, மன்ஹாட்டன் நகரத்தில் உள்ள அரங்கில் பேசத் தொடங்கினார் மால்கம் எக்ஸ். பேச்சைத் தொடங்கிய சில நிமிடங்களிலே பார்வையாளர்களில் இருந்த ‘நேஷன் ஆப் இஸ்லாம்’ அமைப்பைச் சேர்ந்த மூவர், மால்கம் எக்ஸ் மீது சுடத் தொடங்கினர். மால்கம் எக்ஸ் அவ்விடத்திலேயே சரிந்து விழுந்து இறந்தார். அப்போது அவருக்கு வயது 39.

மால்கம் எக்ஸ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்த மார்டின் லூதர் கிங், “இனப் பிரச்னையை நாங்கள் இருவரும் ஒரே கண்ணில் பார்த்து அணுகாவிட்டாலும், மால்கம் எக்ஸ் இனப்பிரச்னையின் வேர் மீது விரல் வைத்து சுட்டிக் காட்டினார். ஒரு இனமாக நாங்கள் அனுபவிக்கும் துன்பங்களை உணர்ந்து, அவற்றுக்கு எதிராக செயல்பட்ட மால்கம் எக்ஸ் மீது யாரும் நிச்சயம் சந்தேகப்படவே முடியாது” எனக் கூறினார்.

மால்கம் எக்ஸ் கறுப்பின மக்களுக்காகப் போராடிய சிறந்த தலைவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். அவரது போராட்டம் அமெரிக்க வாழ் கறுப்பின மக்களிடையே சுயமரியாதையை ஏற்படுத்தித் தந்தது. மேலும், மால்கம் எக்ஸைப் பின்பற்றி, அவரது மரணத்துக்குப் பிறகு, பல அமைப்புகள் உருவாகின.

கடந்த 2013-ம் ஆண்டு, Black Lives Matter என்ற இயக்கம் அமெரிக்காவில் உருவானது. அமெரிக்க காவல்துறையினர் கறுப்பின மக்கள் மீது செலுத்தும் வன்முறைகளைக் கண்டித்து உருவான அந்த அமைப்பின் ஆதர்சமாக மால்கம் எக்ஸ் இருந்தார்.

சமீபத்தில் வெளியான ‘பிளாக் பேந்தர்’ திரைப்படம் ஹாலிவுட் வரலாற்றில், கறுப்பினத்தவரை சூப்பர் ஹீரோவாக முன்வைத்து வெளிவந்த முதல் திரைப்படமாக இருந்தது. உலகம் முழுவதும் இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றதோடு பல விவாதங்களையும் எழுப்பியது. அவற்றுள் ஒரு விவாதம் – ஹீரோ கதாபாத்திரமான டி’சாலா மார்டின் லூதர் கிங்கையும், வில்லன் எரிக் மாங்கர் கதாபாத்திரம் மால்கம் எக்ஸையும் உருவகப்படுத்துவதாக கூறப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் ஹீரோவைவிட, வில்லன் எரிக் மாங்கர் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது” என்றார் மால்கம் எக்ஸ். அவர் இறந்து, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகும், அவரைப் பற்றிய விவாதங்கள் இன்றும் தொடர்ந்து வருகின்றன என்பதற்கு சான்றாக இந்த நிகழ்வுகள் அமைந்து இருக்கின்றன.

சிந்துஜா

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button