செய்திகள்

வவுனியா நகர்- அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் 

வவுனியா நகர் நடுவில் கோயில் கொண்ட குமரேசன் 
சூழ்ந்து வரும் துன்பங்களை துடைத்தே எறிந்திடுவான்
வம்பு தும்பு செய்வோரை அடக்கியே விட்டிடுவான்
தொடர்ந்து வரும் தொல்லைகளை அடியோடு நிறுத்திடுவான்
கந்தசுவாமி உடனிருக்க நமக்கெதுக்கு மனக்கவலை
காவல் செய்து காத்திடுவான் கவலைகளைப் போக்கிடுவான்
வேல் கொண்டு வீற்றிருக்கும் வேலவன் எம்தலைவன்
வேண்டும் வரம் தந்தருள்வான் வெற்றிகளை நமக்களிப்பான்
 
மயிலேறி வரும் கந்தன் வன்னியிலே வந்தமர்ந்தான்
மாண்புடனே நாம்வாழ வழியமைப்பான், அருள் தருவான்
வவுனியா நகரமர்ந்து வழித்துணையாயிருந்திடுவான்
வாழும் வழிகாட்டியெம்மை வளமடையச் செய்திடுவான்
துன்பம் தொலைத்திடுவான் துயரங்கள் போக்கிடுவான்
இன்பம் தந்தெம்மை இனிதாய் வாழவைப்பான்
நம்பிப்பின் தொடர்ந்தால் நலங்களையே தந்திடுவான்
நேர்மையுடன் வாழ்ந்துவிட்டால் வெற்றிகளை நமக்களிப்பான்
நித்திய பூசைகளை தவறாது பெறும் கந்தன் 
நெறிமுறை தவறாது இப்புவியில் வாழச் செய்வான்
வன்னித் தமிழரசர் ஆண்டஎம் நிலத்தில் வந்தமர்ந்தான் துணையிருப்பான்
வளமான எதிர்காலம் எம்மவர்க்கு தந்திடுவான்
வன்னித் தமிழ் மக்கள் வளமுடனே வாழச் செய்வான்
வளம் கொழிக்கும் எம்மண்ணை என்றுமே காவல் செய்வான்
வள்ளி, தெய்வானையரை அருகு கொண்ட கதிர்வேலன் 
வற்றாத மகிழ்ச்சியையே எமக்களிப்பான், உறுதிகொள்வோம்.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button