...
செய்திகள்

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கையில் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும்
பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கில்
ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு, இலங்கையில் விவசாயத்தில்
ஈடுபட்டுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட
தரப்புக்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தது.

இலங்கையில் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும்
பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கில்
ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு ஒன்லைன் முறையில் கடந்த 23ஆம்
திகதி கூடியபோதே, இலங்கையில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் எதிர்கொள்ளும்
சவால்கள் தொடர்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வளவாளர்களுடன் இந்தக்
கலந்துரையாடலை நடத்தியிருந்தது.

இயற்கை வளங்கள் மற்றும் காணிகளின் உரிமை, சந்தைக்கான அணுகல், நிதிச்
சேவைகளுக்கான அணுகல், புதிய தொழில்நுட்பம், குடும்பம் சார்ந்த பராமரிப்புப்
பொறுப்புக்கள் உள்ளடங்கலாக ஐந்து பிரதான பிரிவுகளின் கீழ் விவசாயத்துறையில்
உள்ள பெண்கள் சவால்களுக்கு முகங்கொடுப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்தவர்கள்
சுட்டிக்காட்டினர். இந்த விடயம் சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கவனத்துக்குக்
கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அத்துடன், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்தால் இலங்கையின்
உணவுக் கட்டமைப்பைத் தயாரிக்கும் மற்றும் செயற்படுத்தும் நடைமுறையில்
பெண்களின் நேரடியான பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்கள்
மேலும் சுட்டிக்காட்டினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த விசேட குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் வைத்திய
கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே குறிப்பிடுகையில், ஒட்டுமொத்த விவசாயத்
துறையிலும் பொதுவான பிரச்சினைகள் காணப்படுவதாகவும், இந்தக் கலந்துரையாடலின்
மூலம் விசேடமாகப் பெண்களுக்குக் காணப்படும் பிரச்சினைகளை அறிந்துகொள்ள
முடிந்திருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, இந்த விடயம் தொடர்பில் விசேட குழு
கவனம் செலுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார். அத்துடன், 2022ஆம் ஆண்டுக்காக
முன்வைக்கப்படவிருக்கும் வரவுசெலவுத்திட்டத்தில் இந்த விடயங்கள் தொடர்பில்
கவனம் செலுத்துமாறு நிதி அமைச்சுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இந்தக் கலந்துரையாடலில் கமநல அமைப்புக்களின் தலைவிகள் சிலரும்
ஒன்லைன் முறையின் ஊடாக இணைந்து தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், இம்ரான்
மஹ்ரூப், மஞ்சுளா திசாநாயக, கலாநிதி ஹரினி அமரசூரிய, டயானா கமகே ஆகியோரும்,
கமத்தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், மகளிர் மற்றும்
சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள்,
கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின்
மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், பாராளுமன்ற பணியாட் தொகுதியின்
பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர உள்ளிட்ட பாராளுமன்ற
அதிகாரிகளும் ஒன்லைன் முறையின் ஊடாக இணைந்துகொண்டிருந்தனர்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button


Thubinail image
Screen