...
செய்திகள்

விவசாயத்துறை உட்பட முக்கிய 6 அமைச்சுக்களில் அடுத்த வாரம் மாற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ள 10 ஆவது பாராளுமன்றின் முதலாவது அமர்விற்கு முன்னர் எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அறிய முடிகிறது.

விவசாயத்துறை உள்ளிட்ட முக்கிய 6 அமைச்சு பொறுப்புக்களில் முதற்கட்டமாக மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலை தொடர்ந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியதிகாரத்தை அமைத்தது.

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி கண்டி தலதா மாளிகையில் மகுல்மடுவ மண்டபத்தில் பதவி பிரமானம் செய்துக் கொண்டார்கள்.

பிரதமர் உட்பட அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 25ஆகவும், இராஜாங்க

அமைச்சர்களின் எண்ணிக்கை 39ஆகவும் ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்டது. கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையிலும்,இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையிலும் அதிகரித்த போக்கு காணப்பட்டது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி பிரதான ஐந்து அமைச்சு பொறுப்புக்களில் திடீரென மாற்றம் ஏற்படுத்தினார். கல்வி சுகாதாரம், வெளிவிவகாரம், போக்குவரத்து, ஊடகத்துறை, ஆகிய அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இதன்போது இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு புதிதாக அபிவிருத்தி இணைப்பு கண்காணிப்பு அமைச்சு பொறுப்பும் மேலதிகமாக வழங்கப்பட்டது.

பஷில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதியால் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.

இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய 

ராஜபக்ஷ கடந்த மாதம் 13ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத்தொடரை இம்மாதம் 18ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். 10ஆவது பாராளுமன்றின் முதலாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பங்குப்பற்றுதலுடன் எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது. பிரதான 6 அமைச்சு பதவிகளில் முதற்கட்டமாக மாற்றம் ஏற்படுத்தவுள்ளதாகவும், பிரதான பேசுபொருளாக உள்ள விவசாயத்துறை அமைச்சில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது.

காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவிற்கு விவசாயத்துறை அமைச்சு பதவியை வழங்குமாறு முக்கிய தரப்பினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளதாக அறிய முடிகிறது.

வெற்றிடமாகியுள்ள தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சிற்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவை நியமிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அறிய முடிகிறது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen