ஆன்மீகம்

வெள்ளவத்தை – அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில்

மேல்மாகாணம் – கொழும்பு மாவட்டம் வெள்ளவத்தை – அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில்

காத்து அருளளித்து அரவணைக்கும் தாயே
காலமெல்லாம் உடனிருந்து காத்தருள வாருமம்மா
காலவெள்ளம் அள்ளிவரும்
வேதனைகள் களைந்துவிட
உறுதுணையாயிருந்திடம்மா தாயே பத்திரகாளி அம்மா

அழகு மிகு திருக்கோயில் உரித்துடைய தாயே
அச்சமின்றி வாழும் வழி தந்தருள வாருமம்மா
அதர்மத்தை அடியோடு அகற்றி நலம் பெற்றுவிட
உறுதுணையாயிருந்திடம்மா தாயே பத்திரகாளி அம்மா

கொழும்பு மாநகரினிலே கோயில் கொண்ட தாயே
கொடுபகைகள், கொடுமைகளை அழித்திடவே வாருமம்மா
கொடுமதி கொண்டோரைத் தூர விலக்கிவிட
உறுதுணையாயிருந்திடம்மா தாயே பத்திரகாளி அம்மா

அறம் காத்து மறமளித்து அருளுகின்ற தாயே
அன்பு கொண்டோர் துணைபெற அருளிடவே வாருமம்மா
அஞ்சும் நிலை அற்றநிலை பெற்றுவிட
உறுதுணையாயிருந்திடம்மா தாயே பத்திரகாளி அம்மா

பக்தியுடன் அடிபணிவோர் நலன் காக்கும் தாயே
பாதகங்கள் நெருங்காநிலை உறுதி செய்ய வாருமம்மா
பண்பு கொண்ட உயர்நிலையில் என்றும் நாம் நடந்துவிட
உறுதுணையாயிருந்திடம்மா தாயே பத்திரகாளி அம்மா

துரத்தி வரும் துன்பங்களைத் தடுத்தருளும் தாயே
துன்பமில்லா நிம்மதியை எமக்களிக்க வாருமம்மா
மகிழ்வு குன்றா வாழ்வினையே நாமென்றும் பெற்றுவிட
உறுதுணையாயிருந்திடம்மா தாயே பத்திரகாளி அம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button