உலகம்

ஹகிபிஸ் புயல் : 18 பேர் உயிரிழப்பு, மீட்புப்பணிகளில் 27 ஆயிரம் படையினர்.

ஜப்பானைத் தாக்கிய ஹகிபிஸ் புயலினால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மீட்புப்பணிகளில் 27 ஆயிரம் ஜப்பான் படையினர் களமிறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டோக்கியோவைத் தாக்கிய புயல் வடக்கு நோக்கி நகர்ந்து செல்வதாகவும் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட மழை வீழ்ச்சி மற்றும் வெள்ளத்தினால் டோக்கியோவின் தென் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட போதும், 13 பேரை இதுவரை காணவில்லை என ஜப்பானின் என்.எச்.கே. ஊடகம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை உலங்குவானுர்திகளின் உதவியுடன் படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மீட்புப்பணிகளில் 27 ஆயிரம் படையினர் உட்பட ஆயிரக்கணக்கான மீட்புப்பணியாளர்களும் ஈடுபட்டுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு டோக்கியோவின் கவாகோய் நகரில் வெள்ளத்தில் சிக்கி வீடுகளில் தவித்துக் கொண்டிருப்பவர்கள் படகுகளின் உதவியுடன் மீட்கப்பட்டு நலன்புரி முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புயல் அதன் வேகத்தை இழந்துள்ள போதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு விமான மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய 4 லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button