செய்திகள்நுவரெலியாமலையகம்

ஹட்டன் நகரம் மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களை முடக்குமாறு கோரிக்கை!

ஹட்டன் நகரம் மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் அண்மைக் காலமாக கொரோனா தொற்றுப் பரவல் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

எனவே, உடனடியாக ஹட்டன் நகரத்தை முடக்கி, சன நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு நகர வர்த்தகர்கள் முன்வர வேண்டுமென, ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் டொக்டர் அழகமுத்து நந்தகுமார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“நாட்டில் கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மலையகமும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றது.

“நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள், மரணித்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து காணப்படுகின்றன.

“அந்த வகையில், ஹட்டன் நகரம் மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் கொரோனா  தொற்றுப் பரவலும், மரணங்களும் தினசரி அதிகரித்த வண்ணம் உள்ளன.

“நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு இரத்தினபுரி, பலாங்கொடை, பதுளை, பண்டாரவளை, கேகாலை முதலான நகரங்களை இரண்டு வார காலத்துக்கு மூடுவதற்கு அங்குள்ள வர்த்தக சங்கங்கள் தாமாகவே முடிவெடுத்து, மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

“அதேபோல், மலையகத்தின் முக்கிய கேந்திர நிலையமாகக் காணப்படும் ஹட்டன் நகரத்தில் உள்ள வர்த்தகப் பெருமக்கள் உடனடியாக கடைகளை மூடுவதற்கு முன்வர வேண்டியது அவசியமாகும்.

“நகரம் முடங்கும் போது பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்து விடும். அதன் ஊடாக ஓரளவு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

“இந்த விடயத்தில் மக்களின் பாதுக்காப்பை உறுதிப் படுத்தும் வகையில் வர்த்தகர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

– M.கிருஷ்ணா

Related Articles

Back to top button
image download