...
ஆன்மீகம்

ஹம்பாந்தோட்டை- வில்மட் வீதி அருள்மிகு கதிரேசன் திருக்கோயில்..

கந்தனென்றும், முருகனென்றும், கதிரேசனென்றும்
உன்னைப் பணியுமெமக் கருளளிக்க வந்திடய்யா
கேட்கும் வரம் தந்தருளும் சிவனாரின் இளமகனே
நாம் வேண்டும் நல்லவரம் தந்திடவே விரைந்து எழுந்திடய்யா

தென்னிலங்கை மாநிலத்தை திருவிடமாய்க் கொண்டவனே
திக்கெட்டும் நலம் சிறக்க திடமாக வந்திடய்யா
முத்தமிழின் காவலனாய் பெயர் கொண்ட வேலவனே
நம்வாழ்வு நலம் பெறவே விரைந்து எழுந்திடய்யா

ஹம்பாந்தோட்டை நகரிருந்து அருளாட்சி செய்பவனே
ஆணவத்தை அடக்கி அன்பு செய்ய வந்திடய்யா
அற்புதங்கள் பல செய்து உலகாளும் பரம்பொருளே
நம்மவரின் நிம்மதியை உறுதி செய்ய எழுந்திடய்யா

வேலேந்தி அருள்வழங்கும் உமையவளின் திருக்குமரா
வேதனைகள் அண்டாத நிலையை நீ ஆற்றிடய்யா
கொடுமை களைந்து நலம் வழங்கும் ஆறுமுகா
நல்லவழி நமக்களிக்க விரைந்து எழுந்திடய்யா

வள்ளியம்மன் கோட்டையிலே குடியமர்ந்த வேலவனே
வலிமை பெற்று நிலை நிமிர அருள் தரவே வந்திடய்யா
நல்லொழுக்கம் நிலைநாட்ட அருளுகின்ற குருபரனே
நாமெல்லாம் ஒன்றுபட வழியமைக்க எழுந்திடய்யா

நம்பிவரும் உன்னடியாரை அணைத்தருளும் அறுமுகனே
நம்வாழ்வு ஒளிபெற்று ஒளிர்ந்திடவே அருளிடய்யா
பகையற்ற பெருவாழ்வை தந்தருளும் கதிரேசா
பாரினிலே நல்லமைதி காத்திடவே எழுந்திடய்யா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen