செய்திகள்

கப்பலின் தீ கட்டுப்பாட்டுக்குள் : அமில மழை பெய்வதற்கான சாத்தியம் : மக்களே அவதானம்.!

தீப்பற்றி எரிந்த MV X-Press Pearl கப்பலிலிருந்து வௌியேறிய Nitrogen Dioxide புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Nitrogen Dioxide வாயு காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் அமில மழை கரையோரங்களில் மாத்திரமன்றி, கரையோரத்தை அண்மித்த பகுதிகளிலும் பெய்யக்கூடும் எனவும் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர குறிப்பிட்டுள்ளார். வீடுகளுக்கு வௌியில் வாகனங்கள் உள்ளிட்ட உலோகப் பொருட்கள் இருக்குமாயின் அவற்றை மூடி வைக்குமாறும், கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ளவர்கள் மழையில் நனைவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கப்பலிலுள்ள பொருட்களை கொண்டு வருவதும், சேகரிப்பதும், ஏனைய காரணங்களுக்காக பயன்படுத்துவதும், அவற்றை தொடுவதும் அபாயகரமாக விடயம் என அதிகார சபை அறிக்கையூடாக குறிப்பிட்டிருந்தது. குறித்த எச்சரிகையை மீறி கடற்கரையோரங்களில் மக்கள் ஒன்று கூடி மிதக்கும் பொருள்​களை கொண்டு செல்வதை காண முடிந்தது. இவ்வாறு பொருள்களைக் காவிச் சென்றவர்களுக்கு தோல்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர தெரிவித்தார்.

கரையோர பகுதிகளில் ஏதேனும் பொருட்கள் கரையொதுங்குமாயின் 1981 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால், மீனவர்களின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, கடற்றொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த 6 நாட்களாக தீப்பற்றி எரிந்த MV X-Press Pearl கப்பலின் தீ பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஹசீரா துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு வந்த இந்த MV X-Press Pearl என்ற கப்பலில் கடந்த வியாழக்கிழமை (20) தீ ஏற்பட்டது. கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்ட நிலையில் கப்பலில் தீப்பற்றியுள்ளது.

Image

Related Articles

Back to top button