செய்திகள்

திருகோணமலை- ஆலடி விநாயகர் திருக்கோயில் .

திருகோணமலை நகரினிலே கோயில் கொண்ட திருமகனே
திசையெங்கும் திருக்கருணை நிரவியருள் தந்திடய்யா
தொல்லைகளகற்றி நன்மை தரும் விநாயகனே
தொடர் துன்பம் துடைத்தெறிந்து துணையாக இருந்திடய்யா
அலைமோதும் கடலருகே அமர்ந்தருளும் விநாயகனே
அச்சமில்லா மனவுறுதி விரைந்து நீ தந்திடய்யா
ஆறுதலைத் தந்து அணைத்தருளும் நாயகனே
தேறுதலைத் தந்தெமக்குத் துணையாக இருந்திடய்யா
கோணேசர் பார்வையிலே குடியமர்த்த கணபதியே
ஆணவத்தை அழித்து அமைதி நிலை தந்திடய்யா
கேட்டவரம் கொடுத்தருளும் உமையவளின் புத்திரனே 
தொல்லையில்லா நல்வாழ்வின் துணையாக இருந்திடய்யா
ஆலடி விநாயகரென்ற பெயர் கொண்ட நாயகனே
ஆற்றலுடன் எழுச்சிபெற உறுதுணையைத் தந்திடய்யா
எதிர்கொள்ளும் துன்பங்களைத் துடைத்தெறியும் திருமகனே
எதிர்காலம் வளமடையத் துணையாக இருந்திடய்யா
தமிழ் முழங்கும் திருமலையில் அமர்ந்தருளும் கோமகனே
தரணியெங்கும் தமிழ் ஒளிர வழியை நீ தந்திடய்யா
தொன்மைமிகு தமிழ் மொழியின் உரித்துடைய தலைமகனே
வளம் மிகுந்த எதிர்கால எழுச்சிக்கு துணையாக இருந்திடய்யா
கிழக்கிலங்கை கோயில் கொண்ட பார்வதியின் புத்திரனே
கிளர்ந்து வரும் கொடுமைகளை முளையிலேயே அழித்திடய்யா
நேர்மை மிகு நல்வாழ்வு வாழ வழிகாட்டி விட்டு
நிம்மதியாய் நாம் வாழ துணையாக இருந்திடய்யா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button