செய்திகள்

யாழ்ப்பாணம்- கந்தரோடை அருள்மிகு அருளானந்தப் பிள்ளையார் திருக்கோயில்

 
தமிழ் முழங்கும் திருவிடத்தில் அமர்ந்தருளும் சிவன் மகனார்
தரணியிலே நல்லருளைப் பரப்பியருள் செய்திடுவார்
நம்பியவர் அடிபற்றின் நலன்கள் பலதந்திடுவார்
 கந்தரோடையில் கோயில் கொண்ட பிள்ளையாரைப் போற்றிடுவோம்
யாழ்ப்பாண வளநாட்டில் வீற்றிருக்கும் சிவன் மகனார்
பாழடையும் நிலையினின்று எமையென்றும் மீட்டிடுவார்
வாட்டமின்றி வாழ்வதற்கு வழியையும் செய்திடுவார்
உள்ளத்தில் உறையுமெங்கள் பிள்ளையாரைப் போற்றிடுவோம் 
எட்டுத்திக்கும் அருள்பரப்பி உலகாளும் சிவன் மகனார்
உலகெங்கும் நலம் பொங்க வாழ வழி செய்திடுவார்
கேட்டவரம் தந்து நிம்மதியும் அருளிடுவார்
ஏற்றமிகு வாழ்வுதரும் பிள்ளையாரைப் போற்றிடுவோம் 
அருளானந்தப் பிள்ளையாரென்ற பெயர் கொண்ட சிவன் மகனார்
குறைகளைந்து நிறைவடைய வழிகாட்டி விட்டிடுவார்
பெருங்கருணைப் பெருவள்ளல் கருணையையும் அளித்திடுவார்
நன்மை செய்து வாழவைக்கும் பிள்ளையாரைப் போற்றிடுவோம் 
மருதநிலச் சூழலிலே கோயிலுறை சிவன் மகனார்
இப்புவியில் மானமுடன் நாம் வாழ வழி தந்திடுவார்
தொடங்கும் நற்கருமம் துலங்கிடச் செய்திடுவார்
மேன்மையுற்று வாழவைக்கும் பிள்ளையாரைப் போற்றிடுவோம் 
எங்கும் நிறைந்திருக்கும் எங்கள் ஐயன் சிவன் மகனார்
தளராத மனவுறுதியையும் தான் தந்திடுவார்
உள்ளத்தில் இருந்தெமக்கு ஆசியையும் அருளிடுவார்
கந்தரோடையமர் அருளானந்தப் பிள்ளையாரைப் போற்றிடுவோம். 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button