நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூரண ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அதனால் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
நாட்டிற்கு பெரும் கேடாக விளங்கும் போதைப்பொருள் பாவனையையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டிரான் அலஸ்,
“யுக்திய” என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கை குறித்து தற்போது நாடு முழுவதும் பேசப்படுகிறது. இந்த நாட்டில் போதைப்பொருள் வர்த்தகமும் பாதாள உலக செயற்பாடுகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இவற்றை யாராவது நிறுத்த வேண்டும். எனவே இதனை நிறுத்த தீர்மானித்தேன். அதற்காகத்தான் “யுக்திய” சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த விடயத்தில் சமூக பொலிஸ் குழுக்களுக்கும் விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை வெற்றியடைய மக்களின் ஆதரவும் குறிப்பாக ஊடகங்களின் ஆதரவும் அவசியம். முப்பது வருட யுத்தம் வடக்கு கிழக்கில் மாத்திரமே இருந்தது. ஆனால் தற்போதுள்ள இந்த யுத்தம் நாடு பூராகவும் பரவியுள்ளது. இதனை முடிவுக்குக் கொண்டுவர பொதுமக்கள் வழங்கும் ஆதரவு பாதுகாப்புத் துறைக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
எனவே, இதற்குத் தேவையான ஆதரவையும் சரியான தகவல்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு முழுமையான ஒத்துழைப்பு கிடைத்தால் அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒழிக்க முடியும் என நான் நம்புகிறேன்.
அத்துடன், கடல் மார்க்கமாக இந்நாட்டுக்கு போதைப்பொருள் கொண்டு வருவதைத் தடுக்க விசேட செயல்திட்டமொன்றை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர். முதலில், நாட்டில் இயங்கும் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நிறுத்த வேண்டும். இரண்டாவதாக போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பாதாள உலக செயற்பாடுகள் நிறுத்த வேண்டும்.
மூன்றாவதாக, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். போதைக்கு அடிமையானவர்களுக்குப் பதிலாக போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கினேன்.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 4,665 பேர் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. இவர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன். கடந்த 04 நாட்களில் மாத்திரம் புலனாய்வுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 731 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்படாத சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக 8,451 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 346 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 61 பேர் சொத்து விசாரணைக்காகவும், 697 பேர் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த 04 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 431 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா, ஹஷிஸ், ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட பெருந்தொகை போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு சொந்தமான வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களின் பெறுமதி சுமார் 162 மில்லியன் ரூபாவாகும். எனவே, இதன் ஊடாக இந்த முயற்சி எவ்வளவு தூரம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு கைப்பற்றப்படும் அனைத்துப் பொருள்களையும் நீதிமன்றம் மூலம் அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பணிகளை ஆரம்பிக்க முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினேன். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் உள்ளார். எனவே ஜனாதிபதியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகள் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் நிறுத்தப்பட மாட்டாது. அதேபோன்று, இதனை ஒரு வாரத்துடன் நிறுத்தாது தொடர்ந்து செயல்படுத்துவோம். இந்நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டு, எதிர்கால சந்ததியினர் அச்சமோ சந்தேகமோ இன்றி வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம்.
சிறுவர்கள், பெண்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இந்த முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து பாதுகாப்புத்துறைக்கு அவசர தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளேன். எனவே, இந்த விசேட தொலைபேசி எண்ணின் கீழ் பெண் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். பெரும்பாலும் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை ஆண் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கூறத் தயங்குகிறார்கள்.
எனவே, 24 மணி நேரமும் இயங்கும் இந்த செயற்பாட்டு அறையில், பெண் காவலர்களை மாத்திரம் பணியமர்த்தப்படுவார்கள். இது தவிர, தமிழில் முறைப்பாடுகளை அளிக்கக்கூடிய வகையில் மேலுமொரு புதிய எண்ணை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.