வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம், சிலாபம் அருள்மிகு முன்னேஸ்வரம் சிவன் திருக்கோயில்
சிதம்பரத்தில் ஆடுகின்ற பேரருளே சிவனே
சித்தத்தில் உறைந்திருந்து அருள் தருவாய் ஐயா
வல்வினைகள் போக்கியெம்மைக் காத்தருளும் சிவனே
வரம் தந்து எங்களுக்கு வாழ்வளிப்பாய் ஐயா
நாடிவந்து உன்பாதம் சரணடைந்தோம் சிவனே
நல்லருளை வழங்கி எமைக் காத்தருள்வாய் ஐயா
பாடித்துதித் துன்னை நாம் போற்றுகின்றோம் சிவனே
பார்த்து அருள் வழங்கி எமை ஆதரிப்பாய் ஐயா
பூவுலகில் எமக்குத்துணை நீயன்றோ சிவனே
பூமகளின் மைந்தரெம்மை அரவணைத் தருள்வாய் ஐயா
மூவுலகும் ஆளுகின்ற மூத்தவனே சிவனே
மூண்டு வரும் துன்பங்களைத் துடைத்தெறிவாய் ஐயா
வேதங்கள் போற்றுகின்ற முப்பொருளே சிவனே
வேதனைகள் களைந்திடவே வந்திடுவாய் ஐயா
பேதலித்து நிற்பவர்க்கு வழிகாட்டும் சிவனே
பேதமைகள் போக்கியெம்மைக் காத்திடுவாய் ஐயா
இராமபிரான் பூசையினால் பெருமை கொண்ட சிவனே
இரவு பகல் துணையிருந்து பார்த்தருள்வாய் ஐயா
அறம் காத்து மறம் அழித்து அருளுகின்ற சிவனே
அச்சமில்லா நிம்மதியைத் தந்திடைவாய் ஐயா
முன்னேஸ்வரப் பதியில் கோயில் கொண்ட சிவனே
முத்தி தரும் வழியெமக்குக் காட்டிடுவாய் ஐயா
சிந்தையிலே உனையிருத்திப் போற்றுகின்றோம் சிவனே
சிறந்த நல்ல வாழ்வதனைத் தந்திடுவாய் ஐயா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.