அஸ்வெசும நலன்புரி நன்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் சரிசெய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று (2024.01.08) அலரி மாளிகையில் நடைபெற்றது.
2023 ஆம் ஆண்டுக்கான அனைத்து அஸ்வெசும நலன்புரி மேன்முறையீடுகளுக்கும் ஜனவரி 31 ஆம் திகதிக்குள் தீர்வு காணவும், பெப்ரவரி முதல் வாரத்திற்குள் இரண்டாவது சுற்றுக்கான புதிய விண்ணப்பங்களை கோரவும், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிற்கும் அஸ்வெசும நலன்புரி விசேட மேன்முறையீட்டு பிரிவை உருவாக்கி கிராமிய மட்டத்தில் அதற்கான உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்-
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தாங்கள் அஸ்வெசும திட்டத்தை இழக்க நேரிடும் என்ற சந்தேகமும் அச்சமும் கொண்டிருந்தனர். பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் மாவட்ட செயலாளர்கள் உட்பட அனைவரும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தினர். இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், கிராம அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் ஆதரவு வழங்கினர். தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ளன. அவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்காக பணிப்பாளர்கள் சபை நடவடிக்கை எடுத்தது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் எதிர்காலத்தில் பல மேன்முறையீடுகளுக்கு இடம் கிடைக்கும். மேன்முறையீட்டு விசாரணையின் போது ஏற்படும் பிரச்சினைகளை மாவட்ட அரசாங்க அதிபர்களும் பிரதேச செயலாளர்களும் தீர்த்து வைப்பார்கள். தொழில்நுட்ப பிரச்சனை ஆரம்பத்திலிருந்தே வந்தது. கொள்ளளவு போதுமானதாக இல்லை.இப்போது அஸ்வெசும திட்டத்திற்கு சரியானதொரு திட்டம் உள்ளது. குறிப்பிட்ட கட்டங்கள் உள்ளன.
ஒக்டோபர், நவம்பர் ஆகிய இரு மாதங்களில் அனைத்து வாக்காளர் பதிவேடுகளையும் கிராம உத்தியோகத்தர்கள் தயாரித்து முடித்தனர். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதற்காக அறிவிக்கப்பட வேண்டிய திகதி உள்ளதால், அதற்கேற்ப வாக்காளர் பதிவுப் பணிகள் அனைத்தையும் முடிக்க கிராம உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்தனர். அஸ்வெசும திட்டத்திற்கும் அத்தகைய ஆதரவு தேவை. தற்போது அரசின் வறுமை ஒழிப்புத் திட்டம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன, மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.