அரசியல்செய்திகள்

2005 ஜனாதிபதி தேர்தலில் கோட்டா வாக்களித்தாரா? உதய கம்பன்வில வெளிப்படுத்தியுள்ள முக்கிய செய்தி.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வாக்களிக்கவில்லை என பிவிதுரு எல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ 2003 ஆம் ஆண்டில் அமெரிக்க  பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட போதிலும் அப்போது அதனை எவரும் அறிந்திருக்கவில்லை.

ஆனாலும் அவர் தனது மனசாட்சிக்கும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் எதிராகச் செயற்படக்கூடாது என்று கருதி, 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தனது சகோதரனுக்கு அவர் வாக்களிக்கவில்லை.

அண்மையில் பத்திரிகையொன்றில் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட பின்னரும் கூட, 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தார் என்று செய்தியொன்று வெளியாகியிருந்தது.

அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு செயற்படுத்தப்படும் வேலை என்று நாங்கள் அந்த செய்தியைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் தற்போது இதுகுறித்த விசேட விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக குற்ற விசாரணைப்பிரிவு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவிற்கு அறிவித்திருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் பொலிஸாரையும் பயன்படுத்திக்கொண்டு எம்மீது சேறுபூசும் செயல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனவே இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய தேவை எமக்கு எழுந்திருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button
image download