உலகம்செய்திகள்

2019 ஆம் ஆண்டில் சர்வதேச அரங்கில் பதிவான பத்து முக்கிய தகவல்கள் இதோ

நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டிருக்கும் 2019 ஆம் ஆண்டில் பதிவான முக்கிய வெளிநாட்டு தருணங்களை எமது மலையகம் வாசகர்களுக்காக தருகின்றோம்.

உலகின் பெரும் வல்லரசான அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது கொண்டுவரப்பட்டிருக்கும் பதவிநீக்கத் தீர்மானம் ஒரு துருவம் என்றால், புதிய நம்பிக்கையோடு பார்க்கப்படும் உலகின் இளம் வயதுப் பிரதமரான பின்லாந்தின் சன்னா மரின் மற்றொரு துருவமாக பதிவாகியுள்ளார். இந்த இரண்டு வித்தியாசங்களுக்கும் இடையில் உலகம் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் வெனிசுவேலா எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியும் பசி மரணங்களும் நம் காலத்தின் மானுடப் பேரவலம் என குறிப்பிடலாம். உலகத்தின் நுரையீரல் என கருதப்படும் அமேசான் காடுகளில் பற்றி எரிந்த தீ ,மனித போராசைக்கான ஒட்டுமொத்த காரணமாய் அமைந்தது.

என்றாலும், உலகை ஆளும் கோமான்களை நோக்கிய கிரேட்டா தன்பர்க்கின் ‘என்ன துணிச்சல் உங்களுக்கு?’ என்ற கேள்வி, புதிய நம்பிக்கைகளுக்கு வித்திடுகிறது. இந்த வருடத்தில் நடந்தேறிய அத்தனை கொடிய தருணங்களையும் மறந்து இன்முகத்துடனும் மகிழ்வுடனும் 2019 ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்.

ட்ரம்ப் சர்சைகளின் ஜனாதிபதியான சோகம்.

ஆண்டின் வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக உலக மக்களின் அதிக பேசுப்பொருளாக கணிக்கப்பட்டவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் .

ஹனோயில் அமைந்துள்ள முக்கிய விருந்தகமொன்றில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி சந்தித்தார். சர்வதேச தலைவர்கள் பலரின் கவனத்தை ஈர்த்த இந்த நிகழ்வு , வடகொரியாவின் அணுவாயுதத்துக்கு பூட்டு போடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஜி 20 மாநாட்டில் அமெரிக்க நலனுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியமும் பிற நாடுகளும் செயல்படுவதாகக் அமெரிக்க ஜனாதிபதி இதன்போது பகிரங்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக யுத்தம் உலகின் பல நாடுகளில் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தியது. இவையாவற்றுக்கும் மேலாக , தனது அரசியல் எதிரியான , ஜோ பிடேனின் மகன் ஹண்டர் பிடேன் மீது யுக்ரைனில் அமைந்துள்ள மோசடி வழக்கை விசாரிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதியை ட்ரம்ப் நிர்ப்பந்தப்படுத்தியமை உலக அரசியல் பேசுபொருளாகியது. இந்த காரணம் அமெரிக்க ஜனாதிபதி தற்போது எதிர்கொண்டிருக்கும் பாரிய சவாலுக்கும் தன்னை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கும் வித்திடுவதாய் அமைந்தது.

அமெரிக்க செனட் சபை அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் , அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்வு என்னவாகும் என்ற நிலை உருவாகியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் , அமெரிக்க இராஜதந்திரிகளின் முடிவில் தோற்கடிக்கப்படலாம். அவ்வாறு நடைபெறாமலும் இருக்கலாம். அதற்காக சில காலம் காத்திருக்கும் வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க செனட் சபையில் ட்ரம்புக்கு எதிரான பதவிநீக்கும் நிலை வெற்றியீட்டிய போதே டொனால்ட் ட்ரம்ப் தோற்றுவிட்டதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

வினையறுக்கும் பாகிஸ்தான்…

அரைகுறை ஜனநாயகம், மத அடிப்படைவாதம்,பயங்கரவாத ஆதரவு ஆகிய வரலாற்றுத் தவறுகளின் நீட்சி பாகிஸ்தானை வாட்டி எடுக்கிறது என்றே குறிப்பிடலாம். நாட்டின் உற்பத்தியில் பெரும் பகுதி கடன்களுக்கு வட்டி செலுத்தவும், இராணுவத்துக்கே பாதிய தொகையை செல்வதால், பொருளாதார மீட்சிக்கு வழி தெரியவில்லை என்ற பரிதாபம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனைத்தவிரவும் ஏற்றுமதி சரிவு ,வேலைவாய்ப்பின்மை , டொலருக்கு எதிரான பாகிஸ்தான் நாணயத்தின் மதிப்பு 180 ரூபாவாகி விடும் என்று சர்வதேச வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இராஜாங்க ரீதியாகவும் செல்வாக்கு சரிகின்றது என்ற நிலையும் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.

பத்தாண்டு காலம் பாகிஸ்தானை தனது கையில் வைத்திருந்த முன்னாள் இராணுவ தளபதி நவாட் ஷெரிப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமையும் பாகிஸ்தான் வரலாற்றில் இந்த வருடம் முக்கியமாக காணப்பட்டது.

பெண் சக்தி…

பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையுடன் 34 வயதான சன்னா மெரின் ,
பதவியேற்றபோது இன்னொரு பெருமையும் அவருக்காகக் காத்திருந்தது. சமகால உலகின் இளவயது பிரதமர் என்பதுதான் அது. மொத்தமுள்ள 19 அமைச்சர்களில் பிரதமரையும் சேர்த்து 12 பேர் பெண்கள். ஏற்கெனவே பாலினச் சமத்துவத்தில் முன்னணி வகிக்கும் பின்லாந்தை சன்னா மெரின் முதலிடம் நோக்கி நகர்த்துவார் என்ற எதிர்பார்ப்பு பின்லாந்து மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

ஓங்கி ஒலிக்கும் சுயாட்சிக் குரல்….

இந்த ஆண்டில் ஹொங்கொங் மக்கள் இவ்வளவு தூரத்துக்கு கிளந்தெழுவார்கள் என்று யாருமே எண்ணியிருக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட இந்த வருடத்தின் பெரும் பகுதி ஹொங்கொங்கில் போராட்டத்திலேயே கரைந்துள்ளது என்றால் அது மிகச்சரியானதாக இருக்கும். என்ன காரணம் இதற்கு என்று பாரத்தால் சீனாவின் , மேலாதிக்க மனநிலைதான் முக்கியமான காரணம் என்று சாடுகின்றார்கள் சர்வதேச வல்லுநர்கள்.

ஹொங்கொங் கைதிகளை விசாரணைக்காக சீனாவுக்குக் கைமாற்றலாம் என்ற மசோதா தொடங்கப்ட்டது முதலே ஹொங்கொங்கில் பிரச்சினை தோற்றம் பெற்றது. இலட்சக்கணக்கான மக்கள் இந்த மசோதாவுக்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கும் இது வித்திட்டது. அடிப்படையில், ஜனநாயகக் கலாச்சாரத்தில் பிணைந்த ஹாங்காங்கை சீனா படிப்படியாகத் தன்னுடைய அடக்குமுறைக் கலாச்சாரத்துக்குள் கொண்டுவந்துவிடுமோ என்ற மக்களின் அச்சம்தான் இந்தப் போராட்டங்களுக்கு காரணமாக அமைந்தது. இவ்வாறாக அரசியல் சூழ்ச்சியாலும் அதிகார குவிப்பாலும் சுயஅழிவை தேடிக்கொண்டுள்ளது ஹொங்கொங் என்றே குறிப்பிட வேண்டும்.

வளர்ச்சியின் பெயரால்…..

உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளில் பரவிய பெருந்தீ சர்வதேசங்களையும் கதிகலக்கிய பெருந்துயராக பதிவானது.இந்தியாவின் தமிழகத்தின் பரப்பைப் போல கிட்டத்தட்ட 42 மடங்கு அளவுக்கு, அமேசான் நதியின் படுகையில் 55,00,000 சதுர கிலோ மீற்றர் பரப்புக்கு விரிந்திருக்கும் இக்காடுகளின் அழிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பிரெக்ஸிட் தந்த பிரதமர்…

முன்னாள் லண்டன் ஆளுநர் என்ற அடையாளத்தோடு முடிந்திருக்க வேண்டிய போரிஸ் ஜான்சனுக்கு, பெரிய அரசியல் வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது பிரெக்ஸிட் ஒப்பந்தம். தெரோஷா மேவால் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியாத சூழலில் அவர் பதவி விலகினார். அதற்கு பின்னரான சூழலில் பிரித்தானியாவின் பிரதமராக பொரிஸ் ஜான்சன் தெரிவு செய்யப்பட்டார். பிரதமரான ஒரே வாரத்தில் அவருடைய காய்நகர்த்தல்களுக்கு நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாத சூழலில் தேர்தலுக்கு வழிவகுத்து தனது அரசியல் ஆளுமையை பறைசாற்றினார்.

பிரெக்ஸிட் விவகாரத்தையே பிரதான விவாதமாகக் கொண்டு நடந்த தேர்தலில் அவருடைய கன்சர்வேடிவ் கட்சி 365 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விரைவில் விலகுவோம் என்ற பொரிஸ் ஜான்சனின் தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிடைத்த வெற்றி இது என்றாலும், காரியங்கள் எல்லாம் சுமுகமாக முடிவது அவ்வளவு சுலபம் இல்லை என்ற நிலை உருவானது.ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக ஜான்சன் முன்வைக்கும் திட்டம் பிரித்தானியாவையே பிரிந்து விடும் என்ற அச்சம் உலக அரசியல் வல்லுநர்களுக்கு இடையில் தோற்றம் பெற்றுள்ளது.

கருந்துளையின் முதல் படம்…

இதுவரை அறிவியலாளர்களின் யூகத்திலும் கணினிக் கணக்குகளிலும் அறிவியல் எழுத்தாளர்களின் கற்பனையிலும் மட்டுமே திரிந்துகொண்டிருந்த கருந்துளை முதன்முறையாகப் படமெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை எடுத்தது ‘நிகழ்வெல்லை தொலைநோக்கி’ (Event Horizon Telescope) என்ற வலைப்பின்னலைச் சேர்ந் அண்டார்க்ட்டிகா, சிலி, ஸ்பெய்ன் போன்ற எட்டு இடங்களில் உள்ளதுமான மின்காந்தவியல் தொலைநோக்கிகளாகும்.

உலகெங்குமுள்ள 200 அறிவியலாளர்கள் இந்தத் திட்டத்துக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளார்கள். பூமியிலிருந்து 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது உடுமண்டலம். இதன் மையத்தில் உள்ள மிகப் பெரிய கருந்துளைதான் தற்போது படமெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருந்துளை நமது சூரியனைப் போல 650 கோடி மடங்கு நிறை கொண்டதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

கலகக்காரக் கோமாளி…

இந்த வருடத்தின் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலேயே அதிசிறந்தது என்று குறிப்பிடப்படும் அளவுக்கான இயலுமை ஜோக்கர் திரைப்படத்துக்கு உண்டா என்ற கேள்வி அனைவர் மனதிலும் தொற்றியிருக்கிறது. ஆனால், படம் என்பதைத் தாண்டி நம் காலத்தின் சமூக மனநிலையை எங்கோ ஓரிடத்தில் அது பிடித்துவைத்திருந்ததுதான் அவ்வளவு பெரிய விமர்சனங்களுக்குக் காரணமானது.புகழ்பெற்ற காமிக்ஸ் பாத்திரமான ஜோக்கரின் பரிமாணங்களை வேறொரு கோணத்தில் இந்தப் படத்தின் வழி அணுக முற்பட்டுள்ளார் திரைப்பட இயக்குநரான டோட் ஃபிலிப்ஸ். திரைப்படத்தில் நாயகன் ஃபீனிக்ஸ் ஜோக்கராக வாழ்ந்தே காட்டியுள்ளார்.இத்தனை அதிசயங்களுக்கு மத்தியிலும்
கோமாளி திரைப்படம் 1.063 பில்லியன் டாலர் வசூலை குவித்து 2019 ஆண்டில் சாதனையை படைத்தது.

வெனிசூலா பெருந்துயரம்….

சம காலத்தின் பேரவலங்களில் ஒன்று என வெனிசூலா துயரத்தைச் சொல்லலாம். ஜனாதிபதி மதுராவால் அமெரிக்காவின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியவில்லை என்ற சூழல் உருவானது. பிடிவாதமான அவருடைய நிலைப்பாடுகள் நாட்டின் 90 வீதமான மக்களை வறுமைக்குள் தள்ளியிருக்கிறது. பெரும்பாலான துறைகளை அரசுமயமாக்கும் அவருடைய முயற்சியானது உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் பெருக்கவில்லை. ஆனால், அமெரிக்கப் பொருளாதாரத் தடையின் விளைவாக வீழ்ச்சி வேகம் பெற்றது.

அரசியல் அராஜகம், படுகொலைகள், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை காரணமாக இந்த ஒரு வருடத்தில் மட்டும் 53 லட்சம் மக்கள் வெனிசுவேலாவிலிந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

தனி ஒருவனாக சாதித்த கம்யூட்டர்…

அதிவேக சூப்பர் டூப்பர் கணிணி உருவாக்கத்தில் குவாண்டம் கம்ப்யூட்டர் கணிணி உருவாக்கத்தில் ஏனைய நிறுவனங்களை முந்திக்கொண்டு சாதித்துள்ளது பில்கேட்சின் கூகுள் நிறுவனம். ரைட் சகோதரர்கள் ஆகாய விமானத்தைக் கண்டறிந்ததற்கு இணையானதாகக் கருதப்படும் இந்தக் கணினியானது, பாரம்பரியக் கணினிகள் 10,000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும் முடிக்கத் திணறும் ஒரு கணக்கின் விடையை 3 நிமிடங்கள் 20 செக்கன்களில் கண்டுபிடித்துவிடும் வல்லமையை பெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் தயாரிப்பிலும் இது மிகப்பெரிய அளவில் பயன்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

சர்வதேச இராட்சனுக்கு மரணம்…

அமெரிக்காவின் இராணுவ படையின் முற்றுகையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் – பாக்தாதியின் முடிவு இவ்வாண்டில் எழுதப்பட்டமை முக்கிய நிகழ்வாக கொள்ளப்பட்டது. இராக்கில் ஒரு பழங்குடி சமூகத்தில் 1971 ஆம் ஆண்டில் பிறந்த அபு பக்கர் 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கப் படைகள் இராக்கை ஆக்கிரமித்தபோது மசூதியில் மத குருவாக இருந்தவர்.

பின்னர் ஒரு குழுவில் இணைந்து , 2004 ஆம் ஆண்டில் அமெரிக்கப் படைகளால் கைதுசெய்யப்பட்டு காவல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர். அங்கு கிடைத்த பல தீவிரவாதிகளின் அறிமுகத்தின் விளைவாக இன்றைய ஐ.எஸ் அமைப்பின் தலைவராக உயர்ந்தவர்.

பின்லேடனுக்குப் பிறகு பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட இவருடைய வாழ்க்கை, பயங்கரவாதத்தின் தோற்றுவாயையும் முடிவையும் சுட்டிக்காட்டியாக மற்றுமொரு சம்பவமாக பதிவானது.

Related Articles

Back to top button