கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட நான்கு பிரதான தமிழ் பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையிலான வினாவிடைப்போட்டி – 2022 புசல்லாவை, சரஸ்வமதி மத்திய கல்லூரியின் கலையரங்கத்தில் இன்று ( 18.11.2022) மிகவும் அறிவுப்பூர்வமாக நடைபெற்றது.

சரஸ்வதி மத்திய கல்லூரி அதிபர் ஆர்.எஸ். ரவிசந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் (கம்பளை கல்வி வலயம்) ஆர். உமேஸ்நாதன்
அழைக்கப்பட்டிருந்தார்.

கௌரவ அதிதிகளாக கம்பளை சாஹிரா தேசிய கல்லூரி அதிபர் ஏ.எல். சிராஜ், புசல்லாவை இந்து தேசிய கல்லூரி அதிபர் எஸ். சந்திரமோகன், அயரி தமிழ் மகா வித்தியாலய அதிபர் சீலன் ஆகியோர் பங்கேற்றனர். கம்பளை கல்வி வலய உதவிப்பணிப்பாளர் ஜி. கிருஷ்ணபிள்ளை, கம்பளை இந்து கல்லூரி அதிபர் எஸ். ரகு ஆகியோரும் கௌரவ அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.

சிறப்பு அதிதிகளாக கம்பளை கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஏ.எஸ். எழில்பிரியா, சரஸ்வதியன்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பா. திருஞானம், சமூக சேவையாளர் எஸ்.வி. பிரசன்னா, சமூக ஆர்வலரும், கைப்பணி கலைஞருமான எஸ். மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

உயர்தர வகுப்பு கலைப்பிரிவு மாணவர்களுக்காக, சரஸ்வதியன்ஸ் பழைய மாணவர் சங்கத்தின், க.பொ.த. சாதாரணதர ’94’ ஆம் தொகுதி மாணவர்கள் குறித்த வினா விடை போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

‘தமிழோடு விளையாடு’ எனும் மகுட வாசகத்தின்கீழ் நடைபெற்ற வினா விடைப்போட்டியை, ஸ்டெலன்பேர்க் தமிழ் வித்தியாலய அதிபரும், கவிஞருமான கணபதி (புஸல்லாவை கணபதி) மிகவும் நேர்த்தியான முறையில் நெறிப்படுத்தி, தொகுத்து வழங்கினார்.

நான்கு பாடசாலைகளின் தமிழ் ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்றிருந்தனர். ஊடக அனுசரணையை தமிழ் எப்.எம். வழங்கியிருந்தது.

குறித்த வினாவிடைப் போட்டியில் கம்பளை சாஹிரா தேசிய கல்லூரி முதலிடத்தையும், கம்பளை இந்துக் கல்லூரி 2 ஆம் இடத்தையும், புசல்லாவை இந்து தேசிய கல்லூரி 3 ஆவது இடத்தையும், புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரி 4 ஆவது இடத்தையும் பெற்றது.

ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இப்போட்டி நடைபெற்றது. பங்கேற்ற மாணவர்களும் தமது திறமைகளை உரிய வகையில் வெளிப்படுத்தினர்.

 

ஆர்.சனத்