வடமத்திய மாகாணம் – அனுராதபுர மாவட்டம், அனுராதபுரம் புனித நகரம், பசவக்குளம் அருள்மிகு சிவன் திருக்கோயில்

உயிரினுள் உயிராக உறைகின்ற சிவனே
உலகிற்கு கருணையொளி பரப்பிடவே வருவாய்
உன்னருளால் உயிரினங்கள் உய்ய வேண்டும் ஐயா
ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே

பசவக்குளம் அருகினிலே கோயில் கொண்ட சிவனே
பாவங்கள் போக்கி அருள் வழங்கிடவே வருவாய்
உன்னருளால் நிம்மதியெங்கும் நிறைய வேண்டும் ஐயா
ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே

காளியம்மன் திருக்கோயில் அருகுறையும் சிவனே
காலமெல்லாம் உடனிருந்து காத்திடவே வருவாய்
உன்னருளால் தொல்லைகள் எல்லாம் விலக வேண்டும் ஐயா
ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே

தமிழரசர் ஆட்சியிலே சிறப்படைந்த சிவனே
திட்டமிட்டு எம்முரிமை அழிப்போரை அழித்திடவே வருவாய்
உன்னருளால் செந்தமிழர் வாழ்வு எழுச்சிகாண வேண்டும் ஐயா
ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே

தக்கனின் கொட்டமதை அடக்கி அருளியவனே சிவனே
சிதைந்தவுன் திருக்கோயில் எழுப்பிடவே வருவாய்
உன்னருளால் எம் கோயில் மீளெழவே வேண்டும் ஐயா
ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே

அதர்மத்தை அழித்தொழிக்கும் அன்புருவே சிவனே
அமைதியெங்கும் நிலவிடவே வழிகாட்ட வருவாய்
அகிலமெல்லாம் உன்பழம் பெருமை பரவிவிட வேண்டும் ஐயா
ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.