HTML tutorial

கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம் தென்னமரவடி அருள்மிகு வரசக்தி விநாயகர் திருக்கோயில்

தானாகத் தோன்றி வந்தருளும் பிள்ளையாரே
தருமத்தைக் காப்பதற்கு தவறாது எழுந்தருள்வாய்
தொல்லை தருவோரைத் துரத்தி அடித்திடவே
தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே வந்திடைய்யா

வரசக்தி விநாயகரென்ற பெயர் கொண்ட பிள்ளையாரே
வருந்துன்பம் தடுத்தெம்மைக் காப்பதற்கு எழுந்தருள்வாய்
விரைந்து வரும் துன்பங்களை விரட்டி துரத்திடவே
தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே வந்திடைய்யா

கிழக்கிலங்கை தமிழர் மண்ணில் குடியமர்ந்த பிள்ளையாரே
கிலேசமின்றி எமை வாழவைக்க எழுந்தருள்வாய்
கொடுமனது கொண்டோரின் கொட்டம் அடக்கிடவே
தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே வந்திடைய்யா

ஓங்கார ஒலியினிலே உறையும் எங்கள் பிள்ளையாரே
ஒன்றுபட்டு எம்மை வாழ வைக்க எழுந்தருள்வாய்
ஒற்றுமையைச் சிதைக்க முனைவோரின் செயலை முடக்கி அடக்கிடவே
தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே வந்திடைய்யா

அமைதிதந்து ஆற்றல் தரும் வரசக்தி பிள்ளையாரே
அச்சமின்றி நாம் வாழ வழியமைக்க எழுந்தருள்வாய்
அமைதியைச் சிதைத்தெம்மை அவலப்படுத்துவோரை அடக்கிடவே
தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே வந்திடைய்யா

கேட்ட வரம் தந்தெம்மை வாழவைக்கும் பிள்ளையாரே
குவலயத்தில் எம்வாழ்வு உயர்த்திடவே எழுந்தருள்வாய்
கெடுமதி கொண்டோரின் செயல்களை அடக்கிடவே
தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே வந்திடைய்யா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.