ஊவா மாகாணம் – பதுளை மாவட்டம் – பண்டாரவளை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

ஆறுமுகங் கொண்டு ஆறுதலைத் தரும் முருகன்
ஆக்கமுடன் வாழ நல்ல கருணையை அளித்திடுவான்
கேட்கும் நலன் தந்து வாழ்வை உயர்த்திடுவான்
பண்டாரவளை கோயில் கொண்ட சிவனார் இளமகனார்

மலை சூழ்ந்த நன்னிலத்தில் வந்துறையும் திருமுருகன்
மானமுடன் நாம் வாழ வழியமைத்துத் தந்திடுவான்
முன்னேறும் வழிகாட்டி நம் வாழ்வை உயர்த்திடுவான்
பண்டாரவளை கோயில் கொண்ட சிவனார் இளமகனார்

வள்ளி தெய்வானையரை அருகு கொண்டு காட்சிதரும் வேல்முருகன்
வழுவில்லா நல்வாழ்வைத் தவறாமல் எமக்காக்கிடுவான்
வெற்றிகளைத் தந்து வாழ்வை உயர்த்திடுவான்
பண்டாரவளை கோயில் கொண்ட சிவனார் இளமகனார்

தமிழ்த் தெய்வம் என்ற புகழ் கொண்ட வனாம் எங்கள் மால்மருகன்
தழும்பாத மனநிலையைத் தப்பாமல் தந்திடுவான்
திறமைகளைத் தந்தெங்கள் வாழ்வை உயர்த்திடுவான்
பண்டாரவளை கோயில் கொண்ட சிவனார் இளமகனார்

சிவசுப்பிர சுவாமி யென்ற பெயர் பூண்ட எங்கள் குகன்
சீர்மை மிகு சிந்தையுடன் திகழ வழி செய்திடுவான்
செல்வாக்கைத் தந்து நமது நிலை உயர்த்திடுவான்
பண்டாரவளை கோயில் கொண்ட சிவனார் இளமகனார்

ஆணவத்தை அடக்கி அருள் பொழியும் ஆறுமுகன்
அணைத் தெம்மைக் காத்திடுவான் அமைதி மனம் தந்திடுவான்
ஒன்றுபட்ட வாழ்வு தந்து நமது நிலை உயர்த்திடுவான்
பண்டாரவளை கோயில் கொண்ட சிவனார் இளமகனார்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.