மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் மூன்றரை கோடி ரூபா (34,174,000) பணத்தை இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பெரும் தொகை பணம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பெற்றுக் கொடுக்கப்பட்ட தொகை 8,945,900 ரூபா என்றும்; பணியகம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமான தொகையை அறவீடு செய்தமை, பணம் செலுத்தியும் வேலை பெற்றுக் கொடுக்காமை, மற்றும் வெளிநாடு சென்ற பின்னர் திட்டமிட்டபடி வேலை வழங்காத காரணத்தினால் இலங்கைக்கு திரும்பியமை போன்ற காரணங்களுக்காக இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய அவற்றை விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பணத்தை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் பணியகத்தின் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த 1080 முறைப்பாடுகளில் 614 முறைப்பாடுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்களுக்கு எதிராக கிடைக்கப் பெற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக செயல்பட்டதாக உறுதி செய்யப்பட்ட 13 வெளிநாட்டு முகவர் நிலையங்களின் தொழிலாளர் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், முறைப்பாடுகளின் படி பல நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்பட உள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டவிரோதமான செயல்பாடுகள் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 26 சோதனைகளில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் 875 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. அவற்றில் 205 முறைப்பாடுகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 115 வழக்குகள் வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.