HTML tutorial

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – சாவகச்சேரி மீசாலை – பன்றிக்கேணி – அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்

அன்புருவாய், அருளுருவாய்க் காட்சிதரும் அழகன் திருக்குமரன்
ஆனந்தமாய் நாம் வாழ வழி அருளிடுவான்
நெஞ்சகத்தில் நின்றிருந்து நிம்மதியும் தந்திடுவான்
பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி அடிதொழுவோம் நலன் பெறுவோம்

மறமழித்து அறம் காக்க வந்துதிக்கும் திருக்குமரன்
மாண்புடனே நாம் வாழவழி அருளிடுவான்
சிந்தையிலே உறைந்திருந்து சீர்வாழ்வைத் தந்திடுவான்
பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி அடிதொழுவோம் நலன் பெறுவோம்

யாழ்ப்பாண திருநிலத்தில் வந்தமர்ந்த திருக்குமரன்
வாழ்வு சிறப்புடனே நாம்வாழ வழி அருளிடுவான்
ஆழ்மனதில் நிறைந்திருந்து ஆறுதலைத் தந்திடுவான்
பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி அடிதொழுவோம் நலன் பெறுவோம்

கணபதிக் கிளையோனாய் பேறுபெற்ற திருக்குமரன்
ஆணவத்தையடக்கி நாம் வாழ வழி அருளிடுவான்
கணப்பொழுதும் உடனிருந்து காவலையும் தந்திடுவான்
பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி அடிதொழுவோம் நலன் பெறுவோம்

வாழ்வினையே வளமாக்கி மனநிறைவு தரும் திருக்குமரன்
பாழ்படா நிலைதந்து நாம்வாழ வழி அருளிடுவான்
ஊழ்வினைகள் அறுத்தெறிந்து அரவணைப்பைத் தந்திடுவான்
பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி அடிதொழுவோம் நலன் பெறுவோம்

குடமுழுக்கு கண்டு மனமகிழ்வு தரும் திருக்குமரன்
வடஇலங்கை நிலைத்திருந்து நாம்வாழ வழி அருளிடுவான்
உளநோயும், உடல் நோயும் போக்கி உயர்வினையும் தந்திடுவான்
பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி அடிதொழுவோம் நலன் பெறுவோம்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.