HTML tutorial

ஊவாமாகாணம் – பதுளை மாவட்டம் அப்புத்தளை – ஹல்துமுல்லை, பெரகலை களுபான – அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில்

தொல்லைகள் போக்கி காத்தருளும் பெருந்தேவி
துயரநிலை அகற்றிடவே வந்தமர்ந்தாள், வாழவைப்பாள்
எதிர்காலம் ஏற்றமுற என்றும் துணையிருப்பாள்
பெரகலையில் வீற்றிருக்கும் எங்கள் அம்மா கருமாரி

மலை சூழ்ந்த பெருநிலத்தில் வந்துறையும் பெருந்தேவி
மனமகிழ்வு தந்திடவே வந்தமர்ந்தாள், வாழவைப்பாள்
எதிர்காலம் எழுச்சிபெற என்றும் துணையிருப்பாள்
பெரகலையில் வீற்றிருக்கும் எங்கள் அம்மா கருமாரி

நாடிவரும் நல்லவர்கள் நலன் பேணும் பெருந்தேவி
நினைத்தவை நிறைவேற்ற வந்தமர்ந்தாள், வாழவைப்பாள்
எதிர்காலம் மேன்மையுற என்றும் துணையிருப்பாள்
பெரகலையில் வீற்றிருக்கும் எங்கள் அம்மா கருமாரி

கேட்கும் வரம் தந்தெமது குலம் காக்கும் பெருந்தேவி
கேடுகள் அண்டா நிலை தந்திடவே வந்தமர்ந்தாள், வாழவைப்பாள்
எதிர்காலம் ஒளிபெறவே என்றும் துணையிருப்பாள்
பெரகலையில் வீற்றிருக்கும் எங்கள் அம்மா கருமாரி

துணிவு தந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் பெருந்தேவி
துன்பங்கள் தொடராமல் தடுத்திடவே வந்தமர்ந்தாள், வாழவைப்பாள்
எதிர்காலம் வளம்தரவே என்றும் துணையிருப்பாள்
பெரகலையில் வீற்றிருக்கும் எங்கள் அம்மா கருமாரி

பிணி போக்கி சுகம் தந்து காத்தருளும் பெருந்தேவி
பங்கமில்லா நல்வாழ்வைத் தந்திடவே வந்தமர்ந்தாள், வாழவைப்பாள்
எதிர்காலம் வலுப்பெறவே என்றும் துணையிருப்பாள்
பெரகலையில் வீற்றிருக்கும் எங்கள் அம்மா கருமாரி.

ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.