மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூகத்தில் சாதகமான கருத்தாடலை உருவாக்குவதற்குமான அறிவார்ந்த பட்டிமன்ற நிகழ்வொன்று புஸல்லாவை, பிளக்போரஸ்ட் தோட்டத்திலுள்ள சுவாமி விவேகானந்தா அறநெறி பாடசாலை மண்டபத்தில் இன்று (06) மதியம் நடைபெற்றது.

மேற்படி பட்டிமன்றத்தை ஸ்டெலன்பேர்க் தமிழ் வித்தியாலய அதிபரும், சாகித்திய விருது வென்ற கவிஞருமான கணபதி (புஸல்லாவை கணபதி) மிகவும் நேர்த்தியான முறையில் நெறிப்படுத்தி, தலைமை வகித்தார்.

‘பேசலாம் வாங்க’ என்ற மகுடவாசகத்தின்கீழ் பௌர்ணமி தினந்தோறும் நகரங்கள், கிராமங்கள் மற்றும் தோட்டப் பகுதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள குறித்த பட்டிமன்றத்தில் இம்முறை மத மாற்றத்திற்கான அடிப்படை காரணங்கள் குறித்து சில உப தலைப்புகளின்கீழ் அறிவார்ந்த விவாத – உரையாடல் இடம்பெற்றது.

இதற்கமைய இந்துமத தார்ப்பரியம் பற்றிய அறிவின்மை என்ற தலைப்பின்கீழ் நிட்டம்புவ கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் பி இளையராஜா காத்திரமான முறையில் கருத்துகளை முன்வைத்தார்.

பாரபட்சமும் ஏற்றத்தாழ்வும் என்ற தலைப்பின்கீழ் அயரி தமிழ் வித்தியாலய அதிபர் இரா. இராமசீலன் நகைச்சுவை பாணியில் கருத்துகளை அள்ளிவீசி, அரங்கை அதிரவைத்தார்.

சலுகை – வறுமை என்ற விடயப்பரப்புக்குள் தமிழ் ஆசிரியை செல்வி.கெளபிரியா, கருத்துகளை முன்வைத்தார்.

அறநெறி கல்விக்கு முக்கியத்துவம் அழிக்காமை என்ற தலைப்பின்கீழ் செல்வி. இரா.பிரியதர்ஷனி (அபிவிருத்தி உத்தியோகத்தர்) கருத்துகளை முன்வைத்தார்.

தமிழ் ஆசிரியர் தவக்குமார்
, நேர்த்திக்கடன்களும் நம்பிக்கையின்மையும் என்ற தலைப்பின்கீழும், தமிழ் ஆசிரியர் கீர்த்தி பொருளாதார நெருக்கடி தரும் வழிபாட்டு முறைகள், (ஆடம்பரமான) என்ற தலைப்பின்கீழும், விழிப்புணர்வும் வழிப்படுத்தல் இன்மையும் என்ற தலைப்பின்கீழ் இளம் கவிஞர் ராம்தாசும் ஆழமான கருத்துகளை முன்வைத்தனர்.

கொத்மலை கல்வி வலயத்தின் மேலதிக கல்வி பணிப்பாளர் நிர்மலாதேவி உட்பட கல்வி சமூகத்தினரும், பெற்றோர், மாணவர்கள், தோட்ட மக்கள் என பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.