HTML tutorial

தலவாக்கலை லோகி தோட்ட மிடில்டன் பிரிவில் (பெரிய மல்லியப்பு) 15.01.2023 இரவு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 12 வீடுகள் எரிந்து தீக்கிரையானது. இதில் 7 வீடுகள் முற்றாகவும் 5 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருந்தன. இந்த சம்பவத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் தற்காலிகமாக தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கவைக்கப்ட்டிருக்கின்றனர்.

தமது உடைமைகளையும் ஆவணங்களையும் இழந்த தோட்ட மக்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனையடுத்து இலங்கையின் பல பாகங்களில் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்துவரக்கூடிய லங்கா விசன் எக்சன் பவுன்டேசன் நிறுவனத்தின் நிதி அனுசரணையின் ஊடாக குறித்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும் உதவும் வகையில் பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகள் மற்றும் ஆடை பொதிகள் என்பவற்றை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று 25 ஆம் திகதியன்று லோகி மிடில்டன் தோட்டத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் லங்கா விசன் எக்சன் பவுன்டேசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தரராஜ் ரவீச்சந்திரன் மற்றும் நிகழ்ச்சி திட்ட ஒழுங்கிணைப்பாளர்களான சுப்ரமணியம் கிரவுன்சன், சுஜித் மற்றும் தோட்ட முகாமையாளர்கள் உட்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான வாழ்வாதாரமொன்றை ஏற்படுத்தி தந்து உதவுமாறு லங்கா விசன் எக்சன் பவுன்டேசன் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதற்கமைய தங்களால் இயலுமான சகல வித உதவித்திட்டங்களையும் வழங்குவோம் என நிறுவனத்தினர் உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.