தென்மாகாணம்- காலி மாவட்டம்- காலி மாநகரம்- அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன் திருக்கோயில்

அலைகடலின் கரையிருந்து அருள்வழங்கும் சிவனே
அருளளித்து அரவணைத்து காத்திடவே வருவாய்
மலைமகளின் அருளுடனே வாழ்வளிக்கும் கோவே
மலரடியைப் போற்றுகின்றோம் வந்திடுவாய் ஐயா

தென்னிலங்கைக் கரையினிலே கோயில் கொண்ட சிவனே
திக்கெல்லாம் உன்னருளைப் பரப்பிடவே வருவாய்
கல்லான மனங்களையும் கரைய வைக்கும் கோவே
காலி மாநகரிருந்து கருணை செய்வாய் ஐயா

கடலலையின் ஓசையுடன் அருளுகின்ற சிவனே
கலக்கமில்லா நிம்மதியைத் தந்திடவே வருவாய்
கங்கை அம்மை முடிகொண்டு காத்தருளும் கோவே
கருணையுடன் எங்களையும் காத்திடுவாய் ஐயா

சுடலையிலே ஆடுகின்ற திருவருளே சிவனே
சித்த மெல்லாம் சீரடையும் பெருமைதர வருவாய்
உறுகுணையில் குடியிருக்கும் உத்தமனே கோவே
உறுதி தந்து வாழ்வளிக்க வந்திடுவாய் ஐயா

பாண்டியனின் இலச்சினையைக் கொண்ட எங்கள் சிவனே
பாசமுடன் பணியுமெம்மைக் காத்தருள வருவாய்
வானவர்கள் போற்றுகின்ற மாசறுக்கும் கோவே
வந்தணைத்து அருளிடவே விரைந்திடுவாய் ஐயா

மீனாட்சி சுந்தரரெனப் பெயர் கொண்ட சிவனே
மீட்சி பெற்று நாம் வாழ அருள் தரவே வருவாய்
கதிர்காமக் கந்தனைத் தந்திட்ட கோவே
காவல் செய்து எமக்குத் துணை இருந்திடுவாய் ஐயா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.