HTML tutorial

ஹிங்குருகடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உல்விட்ட ஹிங்குருகடுவ பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் நபர் ஒருவர் மதுபோதையில் பிறிதொரு வீடொன்றுக்கு சென்று பெற்றோலை ஊற்றி தீ வைக்க முற்பட்ட வேளையில் குறித்த வீட்டில் மூவர் நித்திரையில் இருந்துள்ளனர். வெளியே சத்தம் கேட்பதை அறிந்து உடன் வெளியே வந்து பார்க்கும் போது குறித்த சந்தேக நபர் ஓட்டம் பிடித்துள்ளார்.

பின்னர் குறித்த வீட்டார் அவரை பிடிப்பதற்கு முற்பட்டு அவரை பின்தொடர்ந்து ஓடிய போது குறித்த சந்தேக நபர் அவரது கையில் வைத்திருந்த துப்பாக்கியினால் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த வீட்டாரினால் ஹிங்குருகடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்தைத் தொடர்ந்து உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதலை மேற்கொண்ட ஹிங்குருகடுவ பொலிஸார் உல்விட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு அவரிடம் இருந்த துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா