HTML tutorial

மத்திய மாகாணம்- கண்டி மாவட்டம்- கண்டி மாநகரம் கட்டுக்கலை- அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்

கண்டி மாநகர் தனிலே கோயில் கொண்ட விநாயகரே
கண்ணின் மணியானவரே காத்தருள வாருமைய்யா
கட்டுக்கலை வீற்றிருந்து திருக்காட்சி தருபவரே
முருகனுக்கு மூத்தவரே உன் காவல் தாருமைய்யா

வந்த துன்பம் போக்கிவிடும் வல்லவரே விநாயகரே
வரும் துன்பம் தடுத்துவிட விரைந்து இங்கு வாருமைய்யா
அஞ்சி நிற்கும் மக்களுக்கு நிம்மதியைத் தருபவரே
முருகனுக்கு மூத்தவரே உன் காவல் தாருமைய்யா

உமையம்மை திருமகனே உத்தமரே விநாயகரே
ஊரெல்லாம் சிறப்புறவே வழி காட்ட வாருமைய்யா
உண்மை யெங்கும் நிலைபெறவே உறுதியைத் தருபவரே
முருகனுக்கு மூத்தவரே உன் காவல் தாருமைய்யா

சங்கடங்கள் போக்கியெம்மை வாழவைக்கும் விநாயகரே
சந்ததிகள் உயர்வுபெற உறுதிசெய்ய வாருமைய்யா
சித்தமெல்லாம் சீரடைய வழி செய்து தருபவரே
முருகனுக்கு மூத்தவரே உன் காவல் தாருமைய்யா

மலைசூழ்ந்த திருவிடத்தில் வந்தமர்ந்த விநாயகரே
மலைப்பில்லா மனவுறுதி தந்தருள வாருமைய்யா
கௌரவமாய் வாழ வழி உறுதி செய்து தருபவரே
முருகனுக்கு மூத்தவரே உன் காவல் தாருமைய்யா

தேரேறிப் பவனிவந்து அருளினைத் தருகின்ற விநாயகரே
திக்கெட்டும் நிம்மதியைத் தந்தருள வாருமைய்யா
நம்பிக்கை தந்தெமக்கு உளஉறுதி தருபவரே
முருகனுக்கு மூத்தவரே உன் காவல் தாருமைய்யா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.