போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பதுளை வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் பசறை விசேட அதிரடிப் படையினரால் பதுளையில் கைது.
பதுளை முத்தியங்கனை பகுதியில் பதுளை வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் ஒருவர் தனது மகிழூந்தில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்து போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக சந்தேகிக்கப்படும் மகிழூந்தை சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த மகிழூந்தில் 145 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 44 வயதுடைய பதுளை வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் மிக நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர் என விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றதாக தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரும் மகிழூந்தும் போதை மாத்திரைகளும் பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இன்றைய தினம் (15/02) குறித்த சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு குறித்த சந்தேக நபர் பதுளை மயிலகஸ்தன்னை பகுதியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா