HTML tutorial

கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம்- திருகோணமலை நகரம் அருள்மிகு திருக்கோணேச நாதர் திருக்கோயில்

அலைமோதும் பெருங்கடலின் அருகமர்ந்த சிவனே
அருகிருந்து நலமருளி வாழ வைப்பாய் ஐயா
மனமகிழ்வு தந்தெம்மை வாழவைக்க வருவாய்
கோணமாமலை கோயில் கொண்ட கோணேசுவரப் பெருமானே அருள்வாய்

மலைமீது வீற்றிருந்து அருள் வழங்கும் சிவனே
மாண்புடனே நாம் வாழ வழி செய்வாய் ஐயா
வெற்றிகளைத் தந்தெம்மை வாழவைக்க வருவாய்
கோணமாமலை கோயில் கொண்ட கோணேஸ்வரப் பெருமானே அருள்வாய்

தந்தையாயிருந் தெம்மைக் காக்கின்ற சிவனே
தெளிவான மனவமைதி தந்தெம்மை வாழவைப்பாய் ஐயா
நிம்மதியை நிரந்தரமாய்த் தந்தெம்மை வாழவைக்க வருவாய்
கோணமாமலை கோயில் கொண்ட கோணேஸ்வரப் பெருமானே அருள்வாய்

மாதுமை அம்மை உடனுறையும் மாதவனே சிவனே
மனம் கோணா நிலை தந்தெம்மை வாழவைப்பாய் ஐயா
முன்னேற்ற வழி திறந்தெம்மை வாழவைக்க வருவாய்
கோணமாமலை கோயில் கொண்ட கோணேஸ்வரப் பெருமானே அருள்வாய்

கிழக்கிலங்கை இருந்தருளும் கோமகனே சிவனே
குறையில்லா நிறை வாழவைத் தந்தெம்மை வாழவைக்க வருவாய்
கோணமாமலை கோயில் கொண்ட கோணேஸ்வரப் பெருமானே அருள்வாய்

பழம் பெருமை கொண்ட தமிழர் நிலம் அமர்ந்தவனே சிவனே
பங்கமில்லா பெரு வாழ்வைத் தந்தெம்மை வாழ வைப்பாய் ஐயா
பெருமை மிகு வாழ்வு தந்தெம்மை வாழவைக்க வருவாய்
கோணமாமலை கோயில் கொண்ட கோணேஸ்வரப் பெருமானே அருள்வாய்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.