HTML tutorial

சப்பிரகமுவ மாகாணம்- கேகாலை மாவட்டம்- வரக்காபொலை – அருள்மிகு ஸ்ரீ மகா பத்திரகாளி அம்மன் திருக்கோயில்

மறமழித்து அறங்காக்க அவதரிக்கும் அன்னை
மகிழ்ச்சி பொங்கும் நிலையருள வந்தமர்ந்தாள் இங்கு
துணையிருப்பாள், அருளளிப்பாள் எமக்கு
வரக்காப்பொலை கோயில் கொண்ட பத்திரகாளி அம்மன்

அழகுமிகு மலைச்சரிவில் காட்சி தரும் அன்னை
குறைகளைந்து நிறைவளிக்க வந்தமர்ந்தாள் இங்கு
வளமளிப்பாள் வாழ்வளிப்பாள் எமக்கு
வரக்காப்பொலை கோயில் கொண்ட பத்திரகாளி அம்மன்

ஆற்றல் தந்து ஏற்றம் தந்து உயர்வளிக்கும் அன்னை
ஆறுதலை அளித்திடவே வந்தமர்ந்தாள் இங்கு
உதவிகள் செய்திடுவாள், உற்றதுணையிருப்பாள் எமக்கு
வரக்காப்பொலை கோயில் கொண்ட பத்திரகாளி அம்மன்

தளராத மனவலிமை தந்தருளும் அன்னை
தயக்கமின்றி வாழச்செய்ய வந்தமர்ந்தாள் இங்கு
தெளிவைத் தந்திடுவாள், தடுமாற்றம் தடுத்திடுவாள் எமக்கு
வரக்காப்பொலை கோயில் கொண்ட பத்திரகாளி அம்மன்

வீரத்தைத் தந்துடனே வெற்றியும் தரும் அன்னை
சோர்வின்றி வாழச் செய்ய வந்தமர்ந்தாள் இங்கு
தீமை பகை போக்கிடுவாள் நிம்மதியைத் தந்திடுவாள் எமக்கு
வரக்காப்பொலை கோயில் கொண்ட பத்திரகாளி அம்மன்

தேடிவந்து தாள் தொழும் அன்பர்க்கு அருள்வழங்கும் அன்னை
சிந்தையிலே இருத்தியவள் நாமம் சொல்வோர்க்கு சேமம் தந்திடவே வந்தமர்ந்தாள் இங்கு
சீரான வாழ்வளிப்பாள், உயர் நிலையைத் தந்திடுவாள் எமக்கு
வரக்காப்பொலை கோயில் கொண்ட பத்திரகாளி அம்மன்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.