HTML tutorial

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம் பசறை, மகதோவ தோட்டம் அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்

வேலவனே உமையவளின் இளமகனே
உலகினையே ஆட்கொள்ளும் சிவனார் மைந்தா
காலமெல்லாம் அள்ளிவரும் தீமைகளை அகற்றிவிட
அருளளித்துக் காத்திடுவாய் பசறையிலே உறைகின்ற கதிர்வேலா உடனிருப்பாய்

மலை சூழ்ந்த நன்னிலத்தில் காட்சிதரும் சிவன் மகனே
எங்களுக்கு நலமளிக்க வந்திடுவாய் சிவனார் மைந்தா
துன்பமென்றும் அண்டாது, தீமைகள் தொடராது தடுத்துவிட
அருளளித்துக் காத்திடுவாய் பசறையிலே உறைகின்ற கதிர்வேலா உடனிருப்பாய்

மயிலேறி உலகளந்த மாமணியே உமைமகனே
மாற்றமில்லா நல்வாழ்வை எமக்கென்றும் அருளுகின்ற சிவனார் மைந்தா
வெற்றிகளைத் தந்தெம்மை உயர்நிலைக்கு விட்டுவிட
அருளளித்துக் காத்திடுவாய் பசறையிலே உறைகின்ற கதிர்வேலா உடனிருப்பாய்

வனப்புமிகு சூழலிலே வந்தமர்ந்த பேரருளே
வழுவில்லா வாழ்வுக்கு வலுவேற்றும் சிவனார் மைந்தா
வீழும் நிலை தடுத்தெம்மை கைதூக்கி விட்டுவிட
அருளளித்துக் காத்திடுவாய் பசறையிலே உறைகின்ற கதிர்வேலா உடனிருப்பாய்

வேல்தாங்கி நின்றிருந்து அருள் வழங்கும் மால்மருகா
வேதனைகள் நெருங்காது காத்தருளும் சிவனார் மைந்தா
நேர்வழியைக் காட்டியெம்மை நன்னிலைக்கு உயர்த்திவிட
அருளளித்துக் காத்திடுவாய் பசறையிலே உறைகின்ற கதிர்வேலா உடனிருப்பாய்

தமிழ் மொழியின் காவலனாய் இருக்கின்ற இளமுருகா
தெளிவான மனவுறுதி தந்தெம்மை ஆளுகின்ற சிவனார் மைந்தா
தொல்லையண்டா நல்வழியில் எம்வாழ்வை நடத்திவிட
அருளளித்துக் காத்திடுவாய் பசறையிலே உறைகின்ற கதிர்வேலா உடனிருப்பாய்.

ஆக்கம்- த.மனேகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.