HTML tutorial

கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம், திருகோணமலை அருள்மிகு திருக்கோணேசுவரம் சிவன் திருக்கோயில்

திருமலையில் கோயில் கொண்டு எமையாளும் பெருமானே
திக்கெட்டும் நலம் பெறவே வாழ்வளிப்பாய் அருள்மதியே
நம்பியுந்தன் தாள் பணியும் எமை என்றும் காத்தருள்வாய்
திருகோணமாமலை யமர்ந்த கோணேசுவரப் பெருமானே

அலைகடலின் மருங்கிருந்து அருள் வழங்கும் பெருமானே
அன்பு நிறை மனத்தினராய் நாம் வாழ வாழ்வளிப்பாய் அருள்மதியே
சரண் அடைந்து உன்பாதம் பணியுமெம்மைக் காத்தருள்வாய்
திருகோணமாமலை யமர்ந்த கோணேசுவரப் பெருமானே

கிழக்கிலங்கை கரையினிலே காட்சி தரும் பெருமானே
கிலேசமின்றி வாழும் நல்ல வாழ்வளிப்பாய் அருள் மதியே
குறைகளைந்து நிறைவளித்து எமைக் காத்தருள்வாய்
திருகோணமாமலை யமர்ந்த கோணேசுவரப் பெருமானே

மாதுமை அம்மை உடன் கொண்டு உறைகின்ற பெருமானே
மாநிலத்தில் மாண்புடனே வாழும் நல்ல வழியமைப்பாய் அருள்மதியே
முனேற்ற வழி திறந்து எமை என்றும் காத்தருள்வாய்
திருகோணமாமலை யமர்ந்த கோணேசுவரப் பெருமானே

இராவணேஸ்வரன் பூசையினால் பெருமை பெற்ற பெருமானே
இவ்வுலகில் இனிய நல்ல வாழ்வளிப்பாய் அருள்மதியே
இன்பம் குன்றா வாழ்வு தந்து எமையென்றும் காத்தருள்வாய்
திருகோணமாமலை யமர்ந்த கோணேசுவரப் பெருமானே

தமிழ் மொழியைத் தந்துலகைச் சிறப்பித்த பெருமானே
தரணியிலே தலை நிமிர்ந்து வாழ நல்ல வாழ்வளிப்பாய் அருள்மதியே
திசையெங்கும் பெருமை பெறும் வாழ்வு தந்து எமையென்றும் காத்தருள்வாய்
திருகோணமாமலை யமர்ந்த கோணேசுவரப் பெருமானே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.