மத்திய மாகாணம்- நுவரெலியா மாவட்டம், அட்டன் நகரம் அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் திருக்கோயில்
எட்டுத் திக்கும் அருள்பரப்பி ஏற்றிடைய்யா கருணை ஒளி
மட்டில்லா பேருவகை வழங்குகின்ற தலைமகனே
ஓட்டிவிடு தீமைகளை ஒளிரச்செய்வாய் நன்மைகளை
அட்டன் மாநகரமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே
மலை சூழ்ந்த மாநிலத்தில் குன்றினிலே கோயில் கொண்டாய்
அலைமோதும் மனங்களிலே ஆறுதலைத் தருவோனே
நிலைகுலையா நிம்மதிக்கு உன்துணையே வேண்டுமைய்யா
தலை தாழ்த்தி வணங்குகிறோம் மாணிக்கப் பிள்ளையாரே
எழில் சூழ்ந்த மலையகத்தின் மத்தியிலே அமர்ந்தவனே
வழித்துணையாயிருந் தெமக்கு நல்லவழி காட்டிடைய்யா
இழிநிலையைப் போக்கிவிடு இன்ப நிலை தந்துவிடு
விழி மலர்ந்து நிற்பவனே மாணிக்கப் பிள்ளையாரே
சலித்து நிற்போர் மனங்களிலே நம்பிக்கை ஒளிநீயே
கிலி கொண்டு துவண்டு நிற்போர் துயர் போக்கி அருள்வோனே
வலிந்து வரும் துன்பங்களை அகற்றி வழி காட்டிடுவாய்
நலிவில்லா நலமளிக்கும் மாணிக்கப் பிள்ளையாரே
நன்மைகள் பெருகிடவும் நானிலத்தோர் மகிழ்ந்திடவும்
உண்மையெங்கும் ஓங்கிடவும் ஊரெல்லாம் செழித்திடவும்
மென்மையுள்ளம் கொண்டவனே அடிபணிந்தோம் உந்தனையே
அன்பைப் பெருக்கியெம்மை ஆட்கொள்ளும் மாணிக்கப் பிள்ளையாரே
வீதிவலம் வந்து நலம் அருளுகின்ற திருமகனே
நாதியில்லை என்ற நிலை எமக்கென்றும் இல்லையைய்யா
ஆதிசிவன் பெற்ற மகன் அருகினிலே நீயிருக்க
கதி நீயே கருணை செய்து ஆட்கொள்வாய் மாணிக்கப் பிள்ளையாரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.