HTML tutorial

இந்திய மீனவர்கள் வடகடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியப் பிரதமர் தலையிட வேண்டுமென வடக்கு மீனவர் சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆறு கடற்றொழிலாளர் சங்கங்களை உள்ளடக்கிய வடமாகாண ஐக்கிய மீனவர் சங்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைக்க யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில், இந்த வார ஆரம்பத்தில் கோரிக்கை மனு ஒன்றை கையளித்ததாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோரிக்கை மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடமாகாண ஒன்றிணைந்த கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா, இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்களுக்கு ஏற்படுகின்ற சேதங்களுக்கு மேலதிகமாக சீன கடலட்டைப் பண்ணைகளாலும் பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

“சீன கடலட்டைப் பண்ணைகளாலும், சட்டவிரோத மீன்பிடியாலும் வடகடலில் உள்ள மீனவர்கள் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். இந்த பிரச்சினைகளில் இருந்து எங்களை காப்பாற்றுமாறு இந்திய பிரதமரிடம் கோரி இந்திய துணை தூதரகத்தில் கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.”

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மேலிடத்திலிருந்து கிடைக்கப்பெறும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டியிருப்பதனால் சுதந்திரமாக தமது கடமைகளைச் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்பிடித் தொழில்துறை அதிகாரிகள் தொலைபேசியில் வரும் செய்திகளுக்குப் பணிந்து செயற்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழலையும் மக்களையும் பாதுகாக்கும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்கிறார்கள். அப்படியானால் இதை யாரிடம் சென்று கூறுவது? நாங்கள் இந்திய துணைத் தூதரகம் மூலம் இந்தியப் பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை விடுக்கிறோம்.”

இந்திய இழுவை படகுகளினால் ஏற்படும் அழிவுகளை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அன்னலிங்கம் அன்னராசா,  வடபகுதி மீனவர்களை கடல் தொழிலில் இருந்து விரட்டும் முயற்சிகளை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டைப் பண்ணையை, இலங்கையின் வடக்கு கடலில் அமைக்கும் முயற்சியை எதிர்த்த அன்னலிங்கம் அன்னராசா, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் குடாநாட்டிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் தலையிட்டு, இந்த முயற்சியை  தடை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

வடக்கு கடலில் வேகமாக அதிகரித்து வரும் கடலட்டைப் பண்ணைகளால் இன்னும் சில வருடங்களில் மக்களுக்குத் தேவையான மீன்கள் கிடைக்காமல் போகும் என மீனவர் சங்கத் தலைவர் எச்சரிக்கிறார்.

அவர் குறிப்பிடுவது போல் யாழ்ப்பாணக் கடல் மட்டுமன்றி கிளிநொச்சி மாவட்டத்தின் வடமேற்கு பூநகரி கடற்பரப்பிலும் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பூனகரி, கவுதாரிமுனையில் சீன நிறுவனமான குய் லாங் அமைத்துள்ள கடலட்டைப் பண்ணையால் சுமார் 3,200 சிறிய மீனவர் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என பாசியூர் மீனவர் சங்கத் தலைவர் பி.மதன் இந்த வருட ஆரம்பத்தில் எச்சரித்திருந்தார்.

சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப ஒரு கிலோகிராம் கடலட்டை குறைந்தபட்சம் 13,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.