லிந்துலை – கேம்பிரி மேற் பிரிவை சேர்ந்த விவசாயிகளை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களின் விவசாய நடவடிக்கைகளை மேம்மபடுத்தும் நோக்குடனும் வன்னி ஹோப் நிறுவனத்தினூடாக விதைகள், மண்வெட்டி, கைமுள் போன்றவை இன்று (18) வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ப்ரைட் சமூக அபிவிருத்தி பேரவை இணைப்பாளர் என்.நகுலேஸ்வரன், வன்னி ஹோப் நிறுவனத்தின் நுவரெலியா மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சாதிகா, ப்ரைட் சமூக அபிவிருத்தி நிறுவன உறுப்பினர் ஜே.பிரேம் மற்றும் வன்னி ஹோப் நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டதுடன் சுமார் 10 விவசாயிகளுக்கு இவ்வாறு விவசாய உபகரணங்களும் விதைகளும் வழங்கப்பட்டிருந்தது சிறப்பம்சமாகும்.
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிய நிலையில் தொடர்ச்சியாக மரக்கறி பயிர்செய்கையை முன்னெடுத்து செல்ல முடியாதுள்ளதாக இங்குள்ள விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மேலும் தொடர்ச்சியாக தமது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டி மரக்கறி பயிர்செய்கையில் ஈடுபட்டு சிறந்த வருவாயைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நிகழ்வில் கலந்துக்கொண்ட ப்ரைட் சமூக அபிவிருத்தி நிறுவன உத்தியோகத்தர் தெரிவித்தார். மேலும் அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டு இயங்கும் வன்னி ஹோப் நிறுவனத்தின் இந்த செயற்திட்டத்திற்கு தாமோ மற்றும் புஷ்பம் கங்காதரன் ஆகியோர் அனுசரணை வழங்கியிருந்ததுடன் இலங்கைக்கான பணிப்பாளர் என் முரளிதரன் அவர்களின் வழிகாட்டளின் கீழ் இடம்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட விதைகளை முறையாக பயன்படுத்தி சிறந்த பிரதிபலனை பெறுவதோடு தொடர்ந்தும் மரக்கறி பயிர்செய்கையில் ஈடுபடுவோமெனவும் விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.
ராசையா கவிஷான் –