பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ள அவுட்கோர் சிஸ்டம் சட்ட ரீதியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒன்று அல்ல என்கிறார் வடிவேல் சுரேஸ் எம்பி.
நுவரெலியாவில் நேற்று (19) இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மத்துரட்ட பெருந்தோட்டம் பிரவுண்ஸ் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஹைபொரஸ்ட் தோட்டம் இலக்கம் இரண்டு பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் கடந்த (09.06.2023) முதல் பத்து நாட்களாக தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக முன்னெடுத்து வந்த பணி பகிஷ்கரிப்பு (19.06.2023) அன்று நுவரெலியா மாவட்ட தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற சுமுகமான பேச்சுவார்த்தையின் பின் முடிவுக்கு வந்தது.
நுவரெலியா மாவட்ட உதவி தொழில் உதவி ஆணையாளர் உப்பாலி வீரசிங்க முன்னிலையில் மாவட்ட செயலக அதிசய கூட்ட மண்டபத்தில் (19) காலை இடம்பெற்ற தொழிற்சங்க பிரமுகர்கள்,தோட்ட முகாமையாளர்கள்,மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 60%வீத பிரச்சினைகளுக்கு இணக்கப்பாடு எட்டியதையடுத்து பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் ஹைபொரஸ்ட் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை தொழில் திணைக்களத்திற்கு முன்மொழிந்த
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ்,சங்கத்தின் நிர்வாக செயலாளர் எஸ்.பி.விஜயகுமார் உள்ளிட்ட பிரதநிதிகள் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந்த பேச்சுவார்த்தையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணி தலைவருமான வீ.இராதாகிருஷணன் உள்ளிட்ட முன்னணி பிரதநிதிகள்,
மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாநில இயக்குனர் எம்.இராஜாராம், உள்ளிட்ட மாவட்ட,மாநில பிரதிநிதிகள்,
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி சார்பில் பிரதிநிதி பிரான்சிஸ் ராஜா,ஆகியோர் கலந்து கொண்டனர்.
தோட்ட கம்பனி சார்பில் தோட்ட முகாமையாளர்கள்,உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இதன் போது ஹைபொரஸ்ட் இலக்கம் இரண்டு தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாக செயற்பாடுகளுக்கு எதிராக முன் வைத்த தொழில் உரிமை பிரச்சினைகள்.நிர்வாகத்தால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் தோடட நிர்வாகத்திற்கும்,தொழிற்சங்க பிரமுகர்களுக்கும் இடையில் வாதங்கள் இடம்பெற்றது.
இதில் மாவட்ட தொழில் திணைக்களத்தின் ஊடாக தீர்வு காணப்படும
கூடிய 60% பிரச்சினகளுக்கு
எழுத்து மூலம் தீர்வு பெறப்பட்டது.
அத்துடன் தொழில் அமைச்சு,பெருந்தோட்ட அமைச்சு,மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சு ஊடாக காணக்கூடிய மேல்மட்ட பிரச்சினகள்
தொடர்பில் கொழும்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,அமைச்சர்களுடன் கலந்துரையாட தீர்வு எடுக்கப்பட்டது.
மேலும் இந்த பேச்சுவார்த்தையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தோட்டத் தொழிலாளர்களின் மனித உரிமைகளை கம்பனிகள் மீறி செயல் படுவதாகவும்,தோட்டத் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படும் வகையில் தான்தோன்றி தனமாக தோட்ட கம்பனிகள்,நிர்வாகங்கள் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
அதேநேரத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் கொண்டு வர பெருந்தோட்ட அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து தொழிலாளர் மக்களின் கௌரவத்தை காப்பாற்ற பாடுபடுவேன் என தெரிவித்த அவர் ஹைபொரஸ்ட் தோட்ட தொழிலாளர்களின் 60% பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டதாகவும்,ஏனைய 40% பிரச்சினைக்கு உயர்மட்டத்தில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ இராதாகிருஷணன் கருத்துரைக்கையில் தோட்டத் தொழிலாளர்களின் பிணக்குகள் தொடர்பில் தனியாக அமர்ந்து பேச தொழில் காரியாலய கூட்ட மண்டபம் இல்லாமல் மேலும் கீழும் மக்கள் அழைந்து திரிகின்றனர்.
எனவே நுவரெலியாவில் தொழில் திணைக்கள கூட்ட மண்டபம் மற்றும் காரியாலயம் தனியாக அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் ஹைபொரஸ்ட் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டுள்ளது சுமுகமான தீர்வு காணப்படும் என்றார்.
கௌசல்யா