பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனின் கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் அதன் முடிவுகளுக்கமைய மெக்ரோனின் கூட்டணி 245 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. எனினும் பெரும்பான்மையான 289 ஆசனங்கள் தேவைப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 2வது முறையாகவும் மென்ரோன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு குறுகிய காலத்திற்குள் பிரான்ஸ் மக்கள் தமது அரசியல் நிலைப்பாட்டில் மாறுப்பாட்டை கொண்டுள்ளமை தேர்தல் முடிவுகளின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பான்மையை இழந்தமையினால் ஜனாதிபதி முன்னெடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ள சீர்த்திருத்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமென கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. இடதுசாரி கட்சிகளின் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்தோடு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மாரின் லீப்பென்னின் கட்சி 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதோடு, பாராளுமன்றத்தில் 89 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 12ம் திகதி இடம்பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.