வடமாகாணம் – மன்னார் மாவட்டம் – மன்னார், மாதோட்டம்- அருள்மிகு திருக்கேதீஸ்வர சிவன் திருக்கோயில்
சித்த மெல்லாம் நிறைந்துறைந்து சீர்வழியைத் தருபவரே
எத்திக்கும் உன்னருளால் ஏற்றம் பெறவேண்டும்
நத்திவரும் பக்தர்களின் நலன் பேணி விட்டிடைய்யா
கௌரி அம்மையுடன் உறையும் கேதீஸ்வரப் பெருமானே
உள்ளமெல்லாம் குளிர்ச்சி பெற உணர்வு தருபவரே
உண்மையெங்கும் உன்னருளால் உறுதிபெற வேண்டும்
மண்ணில் வாழும் உயிரினங்கள் நலன் பேணி விட்டிடைய்யா
கௌரி அம்மையுடன் உறையும் கேதீஸ்வரப் பெருமானே
உயர்வாழ்வு வாழ நல் வழியைத் தருபவரே
மனவுறுதி கொண்டு நல் வாழ்வு பெறவேண்டும்
தெளிவு கொண்ட மனம் தந்து நலன் பேணி விட்டிடைய்யா
கௌரி அம்மையுடன் உறையும் கேதீஸ்வரப் பெருமானே
முத்தமிழைப் போற்றி யென்றும் பெருமை தருபவரே
மூவுலகும் போற்றுகின்ற நல் வாழ்வைப் பெறவேண்டும்
மூர்க்க மற்ற மனம் தந்து நலன் பேணி விட்டிடைய்யா
கௌரி அம்மையுடன் உறையும் கேதீஸ்வரப் பெருமானே
பாலாவி கரையிருந்து நல் அருளைத் தருபவரே
பாவங்கள் நெருங்காத நல் வாழ்வு பெறவேண்டும்
புனித மனம் தந்து நலன் பேணி விட்டிடைய்யா
கௌரி அம்மையுடன் உறையும் கேதீஸ்வரப் பெருமானே
அணைத்தென்றும் ஆட்கொண்டு நற்கதியைத் தருபவரே
அஞ்சும் நிலை இல்லாத நல் வாழ்வு பெறவேண்டும்
அஞ்சாமை உறுதி தந்து நலன் பேணி விட்டிடைய்யா
கௌரி அம்மையுடன் உறையும் கேதீஸ்வரப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.